சிறப்புக் களம்

#பேசாதபேச்செல்லாம் - 3: தாம்பத்திய உறவில் ஆர்வமின்மை ஏற்படுவது ஏன்?

#பேசாதபேச்செல்லாம் - 3: தாம்பத்திய உறவில் ஆர்வமின்மை ஏற்படுவது ஏன்?

Sinekadhara

’’காதலில் கூடல் இல்லையேல் ஊடல்’’ என்று தொன்றுதொட்டு நாம் கேட்டுவருகிறோம். திருமணத்திற்குப் பிறகு தம்பதியரிடையே உறவு வலுக்க, புரிதல் உண்டாக பாலமாக அமைவது தாம்பத்தியம். அது இன்றியமையாததும்கூட. தம்பதியரில் ஒருவருக்கு தாம்பத்யத்தில் ஆர்வம் இருந்து மற்றவருக்கு சிறிது ஆர்வம் குறைந்தாலும்கூட அது பிரிதலில்தான் முடியும். தாம்பத்தியத்தில் ஆர்வமின்மை ஏற்பட மன அழுத்தம், வெளிப்புற அழுத்தம் மற்றும் உடலில் மாற்றங்கள் என பல காரணிகள் இருக்கின்றன. ஆனால் தனது இணைக்கு ஏன் ஆர்வமின்மை ஏற்படுகிறது என்பதற்கான காரணங்களை பலரும் புரிந்து அதை களைந்து சுமூகமாக போகாமல், அதை ஊதி பூதாகரமாக்கி பெரிய பிரச்னைக்குள் சென்றுவிடுகின்றனர். தங்கள் இணையை பிடிக்காதது மட்டும்தான் தாம்பத்தியத்தில் ஆர்வமின்மைக்கு காரணம் என்றில்லை; போதிய புரிதலின்மையும் பிரிவுக்கு முக்கிய காரணமாகிறது என்கிறார் உளவியலாளர் Dr.சுஜிதா.

தாம்பத்தியத்தில் ஆர்வமின்மை ஏற்படுவதால் குடும்ப வாழ்க்கையில் பிரச்னை ஏற்படும். ஏனென்றால் ஒரு மனிதனுக்கு அடிப்படை தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் எந்த அளவுக்கு முக்கியமோ, அதேபோல திருமணத்திற்கு பிறகு குடும்ப வாழ்க்கையில் தாம்பத்ய உறவும் முக்கியமான ஒன்று. தாம்பத்ய உறவில் ஆர்வம் இல்லாதபோது தங்கள் இணையர்மீது ஒருவித வெறுப்பு உண்டாகும். தம்பதியரில் ஒருவருக்கு தாம்பத்ய உறவுக்கான உணர்ச்சிகள் தூண்டப்படும்போது, தங்கள் இணையர் அதற்கு ஒத்துழைக்காவிட்டால் கோபம், வெறுப்பு, எரிச்சல் போன்ற உணர்ச்சிகள் வெளிவரும். இது நாளடைவில் புரிதல், விட்டுக்கொடுத்துப்போதல் போன்றவற்றில் பிரச்னையை ஏற்படுத்தி கருத்து வேறுபாட்டை உண்டாக்கும். இதனால் குடும்ப நிம்மதியே பறிபோகும்.

மேலும் தன்னை பிடிக்கவில்லை என்றால் வேறு யாரையோ பிடித்திருக்கிறது என்று தங்கள் இணையர்மீது ஒருவித சந்தேகத்தை உருவாக்கும். இது தங்கள் இணையர்மீது மட்டுமல்ல; தங்களுடைய நிம்மதியை உருக்குலைத்து, மன அழுத்தத்திற்கு வழிவகுக்கும். இதனால் டோபோமைன் ஹார்மோன் சுரப்பு குறைந்து சந்தோஷத்தை இழக்க நேரிடும். இதனால் செரட்டோனின் அளவும் குறைந்துவிடும். ஹார்மோன் மாற்றங்களும் அதிகரிக்கும். இது ஒருவருடைய உடல், மனது இரண்டையும் சேர்ந்தே பாதிக்கும். இந்த நிலை தொடரும்போது அந்த பந்தம் பெரும்பாலும் விவாகரத்தில் முடிகிறது.

தாம்பத்ய உறவில் ஆர்வம் என்பதை லிபிடோ(Libido) என்று கூறுவர். இந்த லிபிடோ குறைய பல காரணங்கள் இருக்கிறது. ஆண்களிடம் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் குறைதல் லிபிடோ குறைய ஒரு காரணம். நீண்ட நாட்கள் மாத்திரை மருந்து உட்கொள்ளுதல், நாள்பட்ட வியாதி போன்ற காரணங்கள் ஹார்மோன் குறைபாட்டுக்கு காரணமாக இருக்கலாம். அதேபோல் பெண்களுக்கு லிபிடோ குறைய காரணம் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன். மாதவிடாய் சுழற்சி முறையாக இல்லாமல் இருத்தல் ஹார்மோன் சமநிலையின்மை பிரச்னையை ஏற்படுத்துகிறது. ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் குறைதல் லிபிடோ குறைபாட்டு ஒரு காரணமாக அமைகிறது.

ஹார்மோன் குறைபாடு மட்டும் லிபிடோ குறைபாட்டுக்கு காரணமாகாது. போதிய தூக்கமின்மை, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், (Restless leg syndrome) போன்ற நாள்பட்ட நோய்களும் லிபிடோ குறைபாட்டுக்கு காரணம். Restless leg syndrome என்பது பெரும்பாலும் ஆண்களுக்கு ஏற்படக்கூடிய ஒரு பிரச்னை. இதனால் தன்னிச்சையாக கால்களை அசைத்துக்கொண்டே இருப்பர். நினைத்தாலும் அவர்களால் கட்டுப்படுத்த முடியாது. இந்த பிரச்னை உள்ளவர்களுக்கு உடலுறவின்போது Erectile dysfunction என்று சொல்லக்கூடிய ஆணுறுப்பு விறைப்புத்தன்மை நிலைக்கு வராது. இதுவும் உடலுறவின்மீதான ஆர்வத்தை குறைக்கும்.

இதுபோன்ற பல்வேறு காரணங்கள் மற்றும் காரணிகள் இருக்கையில் தாம்பத்தியத்தில் ஆர்வமில்லை என்றாலே சந்தேகமும், கோபமும் மட்டுமே தலைதூக்குவது குடும்பத்தில் விரிசலை மட்டுமே உண்டாக்கும். எந்த பிரச்னைக்கும் பிரிதல் முடிவாகாது. இணையை புரிந்துகொண்டு இணைந்து வாழுங்கள்.

காமம் சார்ந்த சந்தேகங்களுக்கு மருத்துவர் மற்றும் நிபுணர்களிடம் பேசி அவர்கள் தரும் பதிலை உங்களுக்குத் தந்துகொண்டிருக்கிறோம். உங்கள் சந்தேகங்களை கமெண்ட்டில் கேளுங்கள்.