சிறப்புக் களம்

”சிஸ்டமிக் ஸ்களிரோசிஸ் என்ற புது வகை நோயால் பாதிக்கப்பட்ட பெண்” - முதல்வருக்கு கோரிக்கை

webteam

சிஸ்டமிக் ஸ்களிரோசிஸ் என்ற புது வகை நோயால் நுரையீரல் பாதிக்கப்பட்டு படிப்பை பாதியில் நிறுத்தி உயிருக்கு போராடும் இளம்பெண் சிகிச்சைக்காக தமிழக முதல்வரிடம் உதவி கேட்டு உருக்கமாக வேண்டுகோள் விடுத்த வத்தலகுண்டு பெண்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவை சேர்ந்தவர் அன்னக்கொடி. இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார் இவரது மனைவி பாண்டீஸ்வரி. இவர்களுக்கு செந்தூர் என்ற மகனும், ஜமுனா என்ற மகளும் உள்ளனர். ஜமுனாவுக்கு தற்போது 17 வயது ஆகிறது. ஜமுனா ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது கை கால்கள் கருப்பு நிறத்தில் மாறியது. 2015ல் மதுரையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது ஜமுனாவுக்கு சிஸ்டமிக் ஸ்களிரோசிஸ் என்ற புது வகையான நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

25 இலட்சம் பேர்களில் ஒருவருக்கு வரக்கூடிய ஆபத்தான நோய் இது என்று சொல்லப்படுகிறது. சிஸ்டமிக் ஸ்களிரோசிஸ் உடலில் உள்ள இணைப்பு திசுக்களில் வித்தியாசமான வளர்ச்சியை ஏற்படுத்துகிறது. இணைப்பு திசுவானது உடல் உறுப்புகள் தசைகளுக்கு வலிமையும் வடிவத்தையும் கொடுக்கிறது. இதில் சிஸ்டமிக் ஸ்களிரோசிஸ் ஏற்படுத்தும் கோலஜன் உற்பத்தி அதிகரிப்பின் காரணமாக தோலின் அமைப்பு மாறுபடுகிறது. பின்னர் இதனால் வீக்கம் மற்றும் வலி ஏற்படுகிறது.

மேலும் இந்த நோய் தாக்குதல் காரணமாக குறுகிய தமனிகளால் இதயம் ரத்தத்தை போதுமான அளவிற்கு பம்ப் செய்ய முடியாமல் போகிறது. இதனால் நுரையீரல் இதயத்தில் ரத்த அழுத்தம் அதிகரித்து மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. மூளைக்கு ஆக்சிஜன் இல்லாததால் சோர்வு மயக்கம் என ஏற்பட்டு, ஜமுனா கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளார்.

வத்தலகுண்டு பள்ளியில் ஜமுனா படிக்கும் போது வகுப்பில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்று வந்தவர். ஆண்டுகள் ஆக ஆக ஜமுனா மூச்சு விட முடியாமல் தவித்து வந்துள்ளார். அதன் பின் ஆக்சிஜன் சிலிண்டரோடு வாழ வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது. இதனால் பத்தாம் வகுப்புடன் பள்ளிக்கு சென்ற இடத்தில் உயிருக்கு ஆபத்தான நிலை ஏதாவது நிகழ்ந்து விடுமோ என்ற அச்சத்தில் பெற்றோர்கள் பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டனர். படிக்க வேண்டும் என்ற ஆசையுடன் காத்திருந்த ஜமுனா கடந்த ஐந்து ஆண்டுகளாக தினமும் மரணத்தோடு போராடிக் கொண்டிருக்கிறார்.

மருத்துவர்கள் கைவிட்ட நிலையில் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் இயந்திரத்தை விலைக்கு வாங்கி தன் மகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது ஆக்ஸிஜன் சிலிண்டர் இல்லாமல் ஜமுனாவால் இயல்பாக வாழ முடியாது. மேலும் மகளின் மருத்துவ செவவுக்காக ஒவ்வொரு மாதமும் மாத்திரைக்கு 30 ஆயிரம் வரை செலவு செய்து வருகிறார்கள். ஜமுனாவின் மருத்துவ செலவுக்காக அவருடைய பெற்றோர்கள் சொந்த வீட்டையும் விற்றுவிட்டு தற்போது வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜமுனாவை பற்றி அவரது தாய் பாண்டீஸ்வரி பேசுகையில், ”பல நேரங்களில் ஜமுனா கழிப்பறை சென்ற போது மயங்கி விழுவார். உடனே கதவைத் தட்டி நான் ஓடி சென்று அவரது வாயில் வாய் வைத்து ஊதிய பிறகு அவரை தூக்கி வந்து ஆக்சன் இயந்திரம் அருகே அமர்த்தி டியூப்புகளை பொருத்திய பிறகு தான் ஜமுனா எழுந்து அமர்வார். இந்த உயிருக்கான போராட்டம் தினமும் நடந்து கொண்டிருக்கிறது” என்று கண்ணீர் மல்க கூறினார்.

சமீபத்தில் வெளியான ஓ2 திரைப்படத்தில் நயன்தாராவின் குழந்தைக்கு இதே போல் சிஸ்டமிக் ஸ்களிரோசிஸ் என்ற நோய் பாதிப்பு இருப்பதை காண்பித்துள்ளனர். தனது மகளின் நிலை குறித்து மிகவும் கவலைப்பட்ட ஜமுனாவின் பெற்றோர்கள் ஒவ்வொரு நாளும் தன் மகள் உயிருக்காக போராடுவதை பார்த்து கண்ணீர் வடித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது தமிழக முதல்வர் தன் மகளின் சிகிச்சைக்காக ஏதாவது உதவி செய்ய மாட்டார என்ற கோரிக்கையை உடன் கண்ணீருடன் நம்மிடம் தெரிவித்தனர். மக்கள் மீது அக்கறை கொண்டு அதற்கான திட்டங்களை செயல் படுத்தி வரும் தமிழக முதலமைச்சர் உயிருக்கு போராடும் இளம்பெண் ஜமுனாவின் சிகிச்சைக்கு உதவி செய்ய வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாக உள்ளது.

- வீரமணிகண்டன்