சுற்றுச்சூழல்

உலக புலிகள் தினம்: ‘புலிகளை நாம் காத்தால் புலிகள் நம்மை காப்பாற்றும்‘

உலக புலிகள் தினம்: ‘புலிகளை நாம் காத்தால் புலிகள் நம்மை காப்பாற்றும்‘

kaleelrahman

புலிகள் தினம் இந்தாண்டு தமிழ்நாட்டிற்கு கூடுதல் பெருமையும், மகிழ்ச்சியையும் தரக்கூடியது. என்ன காரணம்?

கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் உலக புலிகள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் புலிகள் தினம் அனுசரிக்கப்பட்டாலும், புலிகளை பாதுகாப்பதில் கூடுதல் கவனமும், பொறுப்பும் இந்தியாவிற்கு அதிகமாகவே உள்ளது. காரணம், ஒட்டுமொத்தமாக உலக அளவில் உள்ள புலிகளில் 70 சதவீதத்திற்கும் அதிகமான புலிகள் இந்திய வனப்பரப்பில் வசிக்கின்றன.

உலகம் முழுவதும் உள்ள 4 ஆயிரம் புலிகளில் கடந்த 2018-ஆம் ஆண்டு மத்திய அரசின் அறிக்கையின் படி, இந்தியாவில் மட்டும் மொத்தம் 2 ஆயிரத்து 967 புலிகள் உள்ளன. புலிகள் வாழ்வதற்கு ஒவ்வொரு மனிதனின் பங்களிப்பும் அவசியம் என்பதே இந்த ஆண்டின் கருப்பொருளாகும். இந்தியாவில் மொத்தம் 50 புலிகள் காப்பகங்கள் உள்ளன. அதில், கடந்த ஆண்டு வரை தமிழகத்தில் 4 ஆக இருந்த புலிகள் காப்பகத்தின் எண்ணிக்கை, ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் அறிவிக்கப்பட்டதையடுத்து 5 ஆக உயர்ந்துள்ளது.

இது தமிழ்நாட்டிற்கான பெருமை தரக்கூடிய விசயமாகும். வனத்தில் உள்ள உணவு சங்கிலியை பாதுகாப்பதுடன், புலிகளுக்கான நீர் ஆதாரங்களையும் உறுதி செய்வதால், வனத்திற்கு மட்டுமின்றி, மனித இனத்திற்கும் புலிகள் இன்றியமையாதது எனக்கூறும் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் உதவி வன பாதுகாவலர் பிரசாந்த், தமிழகத்தில் உள்ள முக்கிய அணைகளும், நீர்ப்பிடிப்பு பகுதிகளும் புலிகள் காப்பக பகுதிகளில் அமைந்திருப்பதாக சுட்டிக்காட்டுகிறார்.

பிரசாந்த் (உதவி வன பாதுகாவலர்) நம்மிடம் பேசும்போது... புலிகள் காப்பகம் அனைத்தும் நீர் பாதுகாப்பிற்கும் வழிவகுக்கிறது. சத்தியமங்கலம், முதுமலை புலிகள் காப்பகம் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதியிலும், ஆனைமலை புலிகள் காப்பகம் அமராவதி நீர்ப்பிடிப்பு பகுதியிலும், களக்காடு முண்டத்துறை காப்பகம் கன்னியாகுமரி ஜீவா நதியின் நீர்ப்பிடிப்பு பகுதியிலும், வைகை நதியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் ஸ்ரீவில்லிபுத்தூர் காப்பகமும் அமைந்துள்ளது. முக்கியமான அணைகளான பவானி ஆணை, திருமூர்த்தி ஆணை, பரம்பிக்குளம் - ஆழியாறு ஆணை உள்ளிட்டவை அருகே புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. நாம் புலிகளை காத்தால், புலிகள் நம்மையும், நம் இயற்கையையும் காப்பாற்றும் எனத் தெரிவித்தார்.

வனத்தை செழிப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும் புலி தனித்துவமானது. ஆனால், புலிகளின் தோல், நகம், பற்கள், மாமிசம், எலும்பு, ஆகியவை எண்ணெய் உற்பத்தி உட்பட பல காரணங்களுக்காக வேட்டையாடப்படுவது ஒரு புறமும், வளர்ச்சி திட்டங்களால் காடுகள் சிறு சிறு துண்டுகளாக சிதைக்கப்படுவதாலும் மறுபுறமும் வாழ்விடம் பாதிப்புக்கு புலிகள் தள்ளப்படுவதாக சூழலியல் ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

குமரகுரு (சூழலியல் ஆர்வலர்) வாழ்விடம் குறைந்து வருவதுடன், தரமான வாழ்விடம் இல்லாதது புலிகள் சந்திக்கும் பிரச்னை. வனத்தில் அயல்நாட்டு தாவரங்கள் அபகரித்து வேகமாக வளர்வது ஆபத்தானது. வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரில் வனங்கள் துண்டாடப்படுவதால் வன விலங்குகளின் வாழ்விடங்கள் பாதிக்கப்படுகிறது. இயற்கை சார்ந்த புரிதலுடன் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.

வனத்தின் செழிப்புக்கும், பல்லுயிர் பெருக்கத்திற்கும் மனிதனுக்கு பல கோடி ரூபாய் பொருட்செலவும், வேலைப்பாடுகளும் தேவைப்படும் நிலையில், ஒரு புலி அதை எளிமையாக செய்யக்கூடிய திறன் கொண்டவையாகும் என்பதை அனைவரும் உணர வேண்டும்.

எஸ்.ஐஸ்வர்யா