சுற்றுச்சூழல்

மேற்கு வங்கம்: புயல் பாதிப்புகளை குறைக்க 15 கோடி சதுப்பு நில மரங்களை நடவு செய்ய திட்டம்

மேற்கு வங்கம்: புயல் பாதிப்புகளை குறைக்க 15 கோடி சதுப்பு நில மரங்களை நடவு செய்ய திட்டம்

Veeramani

எதிர்காலத்தில் புயல்களின் தாக்கத்தைக் குறைக்க மாநில அரசு 15 கோடி சதுப்பு நில மரங்களை நடவு செய்யும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

மேற்குவங்கத்தை கடந்த மே மாதத்தில் தாக்கிய புயல் காரணமாக  6 மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான மரங்கள் அழிந்தன. கொல்கத்தாவில் மட்டும் 5,000 மரங்கள் வேரோடு பிடுங்கப்பட்டன. கடந்த 13 மாதங்களில் கடலோரப் பகுதிகளை நாசமாக்கிய யாஸ் மற்றும் ஆம்பான் போன்று, புயல்களால் வருங்காலத்தில் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க மேற்கு வங்க அரசு 150 மில்லியன் சதுப்பு நில மரங்களை மாநிலத்தின் மூன்று கடலோர மாவட்டங்களில் நடவு செய்யும் என அறிவித்திருக்கிறது.

சூறாவளி போன்ற இயற்கை பேரழிவுகளின் விளைவைக் குறைக்க நாம் இயற்கையின் உதவியை நாட வேண்டியிருக்கும். வடக்கு 24 பர்கானாஸ், தெற்கு 24 பர்கானாஸ் மற்றும் கிழக்கு மிட்னாபூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் 150 மில்லியன் சதுப்புநில மரக்கன்றுகள் வன மற்றும் சுற்றுச்சூழல் துறை மூலம் நடவு செய்யப்படும். ரைசோபோரா, ப்ருகுவேரா மற்றும் அவிசென்னியா போன்ற ஆழமாக வேரூன்றி புயல் பாதிப்புகளையும் மண் அரிப்பையும் காக்கும் சதுப்புநில மரக்கன்றுகள் நடவு செய்யப்படும்என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார்.