கடும் வெப்பத்தின் காரணமாக உத்தராகண்ட் மாநிலத்தில் அடுத்தடுத்து காட்டுத்தீ ஏற்பட்டது. இதனால் பல ஆயிரம் ஹெக்டேர் வனப்பகுதி எரிந்து நாசமானது.
வடகிழக்கு மாநிலங்களில் 43 டிகிரி செல்சியஸ்க்கும் அதிகமாக கடும் வெப்பம் பதிவாகி வருகிறது. இதன் தாக்கத்தால் கடும் வறட்சி நிலவுகிறது. மேலும், காடுகளில் அடிக்கடி காட்டுத்தீ ஏற்படுகிறது. இந்த வருடத்தின் பிப்ரவரி மாதம், அதாவது கிட்டத்தட்ட குளிர்காலம் நிறைவடைந்த பிறகு இப்போது வரை உத்தராகண்ட் மாநிலத்தில் 501 இடங்களில் காட்டுத்தீ பிடித்துள்ளது. இதில் 663.94 ஹெக்டேர் வனப்பகுதி முற்றிலும் எரிந்து நாசமாகியுள்ளது என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதில் குமாவோன் வனப்பகுதியில் 371.8 ஹெக்டேர் வனப் பகுதியும், கர்வாலில் 215.4 ஹெக்டேர் வனப் பகுதியும், இவை தவிர வன விலங்கு வசிக்கக்கூடிய 5.5 ஹெக்டேர் நிலமும் காட்டுத் தீயால் முற்றிலும் எரிந்துள்ளது.
இதனால் வனத்துறை கருவூலத்திற்கு 19.7 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், வனப்பகுதியில் ஏற்படும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த வனத்துறையினர் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதில், வனப்பகுதியை பசுமையாக மாற்றக்கூடிய முயற்சிகள் அதிகம் உள்ளதாக உத்தராகண்ட் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.