சுற்றுச்சூழல்

நாட்டில் 2010 முதல் 2019ம் ஆண்டு வரை.. பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றம் அதிகம் - ஐநா தகவல்

நாட்டில் 2010 முதல் 2019ம் ஆண்டு வரை.. பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றம் அதிகம் - ஐநா தகவல்

Sinekadhara

நாட்டில் 2010 முதல் 2019ம் ஆண்டு வரை, பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றம் அதிகமாக இருந்ததாக, ஐ.நா.வின் காலநிலை மாற்றத்திற்கான ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா. நிபுணர் குழுவின் 2,913 பக்கங்கள் கொண்ட ஆறாவது மதிப்பீட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. காலநிலை மாற்ற பாதிப்பு மற்றும் காலநிலை மாற்றத்தை தணித்தல்-2022 என்கிற தலைப்பில் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு 2010 முதல் 2019ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றம் அதிகமாக இருந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக, ஆழமான நடவடிக்கைகள் மூலமாக அனைத்து துறைகளிலும் கார்பன் வெளியேற்றத்தை குறைக்காவிட்டால், புவி வெப்பமடைதலை 1.5 டிகிரி செல்சியசிற்குள் கட்டுப்படுத்த முடியாமல் போகும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

2030ஆம் ஆண்டிற்குள் அனைத்து துறைகளிலும் பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தை பாதியாக குறைக்க வழிகள் இருப்பதாகவும் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் மின் ஆற்றல் பயன்பாடு அதிகரித்துள்ளதால், 2010 முதல் 2019ஆம் ஆண்டு வரை ஆண்டிற்கு 3 சதவிகிதம் அளவிற்கு பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றம் இருந்ததாக, ஐ.நா.வின் காலநிலை மாற்றத்திற்கான ஆறாவது மதிப்பீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே காலத்தில் ஆண்டிற்கு 5 சதவிகிதத்திற்கும் மேல் வியட்நாம், இந்தோனேசியா போன்ற நாடுகளில் பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. புவி வெப்பமடைதலை கட்டுப்படுத்துவதற்கு ஆற்றல் துறையில் பெரியளவில் மாற்றங்கள் தேவைப்படுவதாக குறிப்பிட்டுள்ள அறிவியலாளர்கள், எரிபொருள் பயன்பாட்டைக் குறைத்தல், பசுமை மின்மயமாக்கல், மாற்று எரிபொருள் பயன்பாடு போன்றவை தேவை என்று அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

2015 பாரிஸ் உடன்படிக்கைக்கு பிறகு சர்வதேச அளவில் காலநிலை தொடர்பான ஐபிசிசி அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. காலநிலை மாற்றத்தில் வளர்ந்த நாடுகள் அக்கறைகாட்டி வரும் நிலையில், முன்னெச்சரிக்கையாக செயல்பட்டால் காலநிலை குறித்த சவால்களை எதிர்கொள்ளலாம் என ஐ.நா.வின் நிபுணர் குழு தயாரித்திருக்கும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.