சுற்றுச்சூழல்

மூடுபனி குளிரும், அரிய வகை வரையாடுகளும்... மூணாறில் குதூகலிக்கும் சுற்றுலாப்பயணிகள்!

மூடுபனி குளிரும், அரிய வகை வரையாடுகளும்... மூணாறில் குதூகலிக்கும் சுற்றுலாப்பயணிகள்!

Sinekadhara

குளிர்காலத்தில் மூடுபனிக்கு மத்தியில் அரியவகை வரையாடுகளை கண்டு ரசிக்க மூணாறு இரவிக்குளம் தேசிய பூங்காவிற்குற்கு உட்பட்ட ராஜமலையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்க துவங்கியுள்ளது.

கடல் மட்டத்தில் இருந்து நான்காயிரம் அடிக்கும் மேல் உயரமான "மூடுபனி" மூடிய மலை முகடுகளுக்கு மத்தியில் பச்சை பசேல் முண்டாசு கட்டிய இடுக்கி, மூணாறின் இரவிகுளம் தேசிய பூங்காவிற்க உட்பட்டது ராஜமலை. எந்நேரமும் குளிர் காலநிலை கொண்ட இந்த இடம் வரையாடுகள் வாழ்வதற்கான ஏற்ற சூழலைக் கொண்டது. அழிவின் விளிம்பில் உள்ள அரிய வகை ”வரையாடுகள்”, இந்தியாவில் இமயமலைக்கு அடுத்து, இந்த குளிர்ப்பிரதேசத்தில்தான் பாதி சதவீதம் வாழ்கின்றன.

இந்த 2022ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி ராஜமலையில் மட்டும் 894 வரையாடுகள் உள்ளது தெரியவந்துள்ளது. வரையாடுகளின் பிரசவகாலத்திற்காக பிப்ரவரியில் அடைக்கப்பட்ட ராஜமலை தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந்த அரியவகை வரையாடுகளைக் காண வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு 500 ரூபாய் கட்டணமும் இதர இந்தியா வாழ் சுற்றுலாப்பயணிகளுக்கு 200 ரூபாய் கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை துவங்கியுள்ளதாலும், தமிழகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் கோடை வெயில் சுட்டெரிப்பதாலும் "குளுகுளு" மூணாறுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் தவறாமல் இரவிகுளம் தேசியப்பூங்காவிற்கு வந்து ராஜமலையில் சர்வ சாதாரணமாக உலாவரும் வரையாடுகளை கண்டு ரசித்து வருகின்றனர்.

இதனால் ராஜமலையில் சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் அதிகரித்து வருகிறது. வரையாடுகளைக் கண்டு ரசிக்கும் சுற்றுலாப்பயணிகள் ரம்மியமான இயற்கை எழில் கொஞ்சும் பனிமூட்ட காட்சிகளின் பின்னணியில் வரையாடுகளோடு புகைப்படம் எடுத்தும், கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து விடுப்பட்டும் புத்துணர்ச்சியும் உற்சாகமும் அடைந்து வருகின்றனர். மே மாதத்தில் சுற்றுலாப்பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பதாக இரவிகுளம் தேசிய பூங்கா வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.