சுற்றுச்சூழல்

மார்ச் மாதத்தில் உச்சம் - 122 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கொளுத்திய வெயில்

மார்ச் மாதத்தில் உச்சம் - 122 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கொளுத்திய வெயில்

JustinDurai

இந்தியாவில் 1901-ம் ஆண்டுக்கு பிறகு அதிகபட்ச வெயில் அளவு கடந்த மார்ச் மாதத்தில் பதிவாகியுள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பிப்ரவரி இறுதியில் இருந்தே வெப்பநிலை இயல்பை விட அதிகமாகவே உள்ளது. சுட்டெரிக்கும் வெயில் மக்களைக் கடுமையாக வாட்டி வருகிறது. பல நகரங்களில் 100 டிகிரியைத் தாண்டி வெப்பநிலை பதிவாகி வருகிறது.

இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்தியாவில் 1901-ம் ஆண்டுக்கு பிறகு அதிகபட்ச வெயில் அளவு சென்ற மார்ச் மாதத்தில் பதிவாகியுள்ளது தெரியவந்துள்ளது. கடந்த 2022 மார்ச் மாதத்தில் அதிகபட்ச வெப்பநிலை 33.1 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 20.24 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகியுள்ளது. இது மார்ச் மாதத்தில் நிலவும்  சராசரி கோடைவெப்ப நிலையை விட 1.86 டிகிரி செல்சியஸ் அதிகமாகும். மலைப்பிரதேசங்களில் கூட கடந்த மார்ச் மாதத்தில் இயல்பை விட அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இதற்கு முன்பு இந்தியாவில் 1901-ம் ஆண்டுக்கு பிறகு அதிகபட்ச வெயில் அளவு கடந்த 2010ஆம் ஆண்டில் 33 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தாண்டு ஏப்ரல் மாதத்திற்கான  நீண்டகால முன்னறிவிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதில், தமிழ்நாடு உள்ளிட்ட தெற்கு தீபகற்ப பகுதியில் ஏப்ரல் மாதத்தில் வெப்பம் இயல்பை ஒட்டியும், இயல்பை விட குறைவாகவும் இருப்பதற்கான சாதகமான சூழல் இருப்பதாகவும்,வடமேற்கு, மத்திய மற்றும் சில வடகிழக்கு இந்தியப் பகுதிகளில் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ஏப்ரலிலே உச்சம் தொடும் வெப்பம்... சமாளிக்க என்ன செய்வது?