சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் காற்று மாசுவை கட்டுப்படுத்துவது குறித்து விழிபபுணர்வு ஏற்படுத்தவும், மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்திலிருந்து மிதிவண்டியில் மாவட்ட ஆட்சியரக அலுவலகத்திற்கு சென்றுள்ளார் திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் காயத்ரி கிருஷ்ணன்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “காற்று மாசு, பெரும் சுற்றுச்சூழல் ஆபத்து. காற்று மாசுவால் உலக அளவில் வருடத்திற்கு 2 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். படிம எரிபொருள் பயன்படுத்துவதால் உருவாகும் வாகன மாசு, நகரங்களில் காற்றுமாசு எற்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது. பெரும் நகரங்களில் ஏற்படும் காற்று மாசில், 72% வாகன மாசுதான் உள்ளது என மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.
வாகனங்களில் இருந்து வெளியேறும் கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு, ஹைட்ரோகார்பன்கள், சல்பர் டை ஆக்சைடு மற்றம் நுண்துகள்கள் மனித சுகாதரத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கிறது. இச்சுகாரதாரக்கேடு சுவாச அமைப்பிற்கு கடும் எரிச்சலையும், தலைவலி, குமட்டல், கண் எரிச்சல், நுரையீரல் திறன் குறைதல், உடல் பாதுகாப்பு நலிவடைதல் மற்றும் புற்றுநோயை உண்டாக்குகிறது. புகை, ஓசோன், அமில மழை போன்ற இரண்டாம் நிலை மாசு ஏற்படுத்திகள் கடும் பார்வை கோளாறுகளையும், உடல் பிரச்சனைகளையும் ஏற்படுத்துகின்றன. பெரும்பாலான பெரும் நகரங்களில் அதிக அளவிலான மோட்டார் வாகனங்களினால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதுடன், காற்று மாசு மற்றும் அதிக ஒலி மாசுவும் ஏற்படுகிறது.
காற்று மாசினை கட்டுப்படுத்த தமிழக அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் பல்வேறு பசுமை முயற்சிகளை முன்னெடுத்து செல்ல வேண்டியுள்ளது. காற்று மாசினை கட்டுப்படுத்துவதால், காற்று மாசு மற்றும் பசுமையில்லா வாயுகளின் வெளியேற்றம் குறையும். மேலும் போக்குவரத்து நெருக்கடியும் குறையும். நடப்பது, சைக்கிள் ஓட்டுவது போன்ற தூய்மையான போக்குவரத்தினால் உடல் நலம் கூடுதலாக வலுப்பெறும். உடற்பயிற்சிக்காக சைக்கிள் ஓட்டுவது மற்றும் நடப்பதை, ஒரு போக்குவரத்தாகவும் மக்கள் பயன்படுத்தினால் உடல் ஆரோக்கியம் காக்கப்படும். இப்பசுமை முயற்சியில் அனைத்து தரப்பினரும் இணைந்து காற்று மாசில்லா நிலையினை உருவாக்க அனைவரும் முன்வர வேண்டும்” என கூறினார்.
தொடர்புடைய செய்தி: ”தரமற்ற உணவு வழங்கிய வார்டன் மீது வழக்கு” - காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு