உலகில் சுமார் பத்து லட்சம் எண்ணிக்கையிலான உயிரினங்கள் அழிவின் விளிம்பில் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த குழு ஒன்று, 50 நாடுகளில் 145 நிபுணர்களை கொண்டு பல்லுயிர்களின் பெருக்கம் குறித்து நடத்திய ஆய்வின் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், மனித வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், தாவரங்கள், விலங்குகள், பறவைகள், கடல்வாழ் உயிரினங்கள் என பல்லுயிர்கள் அழிவின் விளிம்பை நோக்கி வேகமாக சென்றுக்கொண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மிகவும் அரியவை உயிரினங்களாக கருதப்படும் டிட்டிகாகா நீர் தவளை, பிலிப்பியன் கழுகு, தாபிர், ராயல் ஆமை, சிஃபாகா குரங்கு, சுமத்திரன் காண்டாமிருகம், கருப்புக் கொண்டை குரங்கு உள்ளிட்ட இனங்களும் வேகமாக அழிந்து வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மூன்றில் ஒரு பங்கு பாலூட்டிகள், 40 சதவீத இருநிலை வாழிகள், 33 சதவீத பவளப்பாறைகள் உள்ளிட்ட நீர்நிலை வாழிகள் பேராபத்தில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
வனங்கள் அழிப்பு, நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு, நில ஆக்கிரமிப்பு, நெகிழி பொருட்கள் பயன்பாடு, புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட காரணங்களால், திமிங்கலம் முதல் மிகச்சிறிய தாவரங்கள் வரை பேராபத்தை சந்தித்து வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இயற்கை பாதுகாப்பிற்கான சர்வதேச ஒன்றியமான ஐ.யு.சி.என்.னின் அறிக்கையின்படி, உலகில் 4ல் ஒரு பங்கு விலங்குகள், பறவைகள் அழிந்து வருவதாக கூறப்பட்டுள்ளது. பல்லுயிர்களின் அழிவுக்கு மனிதர்களின் தவறான செயல்பாடுகளே அடித்தளம் என அடிக்கோடிட்டு காட்டியுள்ள அந்த ஆய்வறிக்கை, அதன் எதிரொலியாக மனித இனத்துக்கு பாதிப்பு ஏற்படுவதற்கான சமிக்ஞை உருவாகி உள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.