வங்கக் கடலில் புதிய புயல் உருவாக இருக்கும் நிலையில் வரும் ஆண்டுகளில் புயல்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறுகிறார்கள் வல்லுநர்கள்.
பூமியின் நிலநடுக்கோட்டுப் பகுதியில் வெப்பத்தால் கடல் நீர் சூடாகிறது. இதனால் கடலின் மேற்பரப்பில் பெரும்பாலான காற்று மேலெழும்பி விடுவதால் அந்த வளிமண்டல பகுதியில் குறைந்த காற்றழுத்தம் ஏற்படுகிறது. இந்தக் குறைந்த காற்றழுத்தத்தை நிரப்ப சுற்றுவட்ட காற்று சுழன்று விரைகிறது. பின்னர் மேலே உறைந்த மேகமும் காற்றோடு சேர்ந்து சுழல்கிறது. இப்படித் தொடர்ந்து, ஏற்படும் நீராவிப்போக்கால் அந்தப் பகுதியை மையமாகக் கொண்டு பெரிய அளவில் குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாகிறது.காற்றின் வலிமை அதிகரித்துக் கொண்டே செல்வதால், அது புயலாக மாறுகிறது. இப்படி உருவாகும் புயல் ஹரிக்கேன், டைஃபூன், சைக்ளோன் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது
இந்தியாவை பொறுத்தவரையில்,
2012 ஆம் ஆண்டில் வங்கக்கடலில் நீலம் என்ற ஒரு புயல் மட்டுமே உருவானது.
2013-ல் 4 புயல்கள் கரையை கடந்தன.
2014இல் அரபிக்கடலில் உருவான ஒரே ஒரு புயல் கேரளாவில் கரையை கடந்தது.
2015இல் ஒரு புயல் கூட கரையை கடக்க வில்லை; ஆனால் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக சென்னையில் மிக கனமழை கொடுத்தது.
2016இல் ரோனு, வர்தா என இரண்டு புயல்கள் தமிழகத்தில் கரையை கடந்தன.
2017இல் புயல்கள் கரையை கடக்கவில்லை என்றாலும் ஒக்கி புயல் மிகுந்த பாதிப்பை தந்தது.
ஆனால் 2018 ஆம் ஆண்டு முதல் நிலை மாறியுள்ளது. 2018இல் மட்டும் 4 புயல்கள் இந்தியாவில் கரையை கடந்தன. டையு,தித்லி, கஜா என 4 புயல்களால் இந்தியாவின் பல பகுதிகளும் பாதிக்கப்பட்டன.
2019ஆம் ஆண்டு 5க்கும் மேற்பட்ட புயல்கள் அரபிக்கடலிலும் வங்கக்கடலிலும் உருவாகின. இதில் ஹிகா, ஃபனி போன்ற அதிதீவிர புயல்களும் அடங்கும். அதேபோல கியார் என்ற சூப்பர் புயல் அரபிக்கடலில் உருவானது. அதேபோல புல்புல், வாயு போன்ற தீவிர புயல்கள் உருவாயின
தொடர்ந்து கடந்த ஆண்டும் 5 புயல்கள் உருவாகி அதில் மூன்று புயல்கள் இந்தியாவில் கரையை கடந்தன.
இதில் ஆம்பன் என்ற சூப்பர் புயலும் அடங்கும். நிசர்கா, நிவர் போன்ற தீவிர புயல்களும் உருவாயின. கடந்த ஆண்டு புயல்களின் தீவிரத் தன்மையும் வானிலை ஆய்வு மைய அறிக்கைகளுடன் முரண்பட்டன.
இவ்வாறாக கடந்த சில ஆண்டுகளாக புயல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு புவி வெப்பமயமாதலே காரணம் என்கின்றனர் வல்லுநர்கள்.
வரும் ஆண்டுகளிலும் புயல்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் விஞ்ஞானி மாத்யூ கூறுகிறார். புயல்களின் எண்ணிக்கை அதிகரிப்பது மட்டுமல்லாமல் புயல்கள் விரைவாக தீவிரமடைவதும் அதிகரிக்கிறது. உதாரணமாக டவ் தே புயல் 24 மணி நேரத்தில் தீவிர புயலாக இருந்து அதி தீவிர புயலாக வலுப்பெற்றது. புவி வெப்பமயமாதலை குறைப்பது மூலமாகவும் புயல் கரையை கடக்கும் இடங்களில் தடுப்புச்சுவர் அமைப்பது மூலமும் பெரிய பாதிப்பில் இருந்து சிறிதேனும் பாதுகாத்துக் கொள்ளலாம் என்றும் கூறுகின்றனர் விஞ்ஞானிகள்.
<iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=314&href=https%3A%2F%2Fwww.facebook.com%2FPutiyaTalaimuraimagazine%2Fvideos%2F274503964409774%2F&show_text=false&width=560" width="560" height="314" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe>