சுற்றுச்சூழல்

"எட்டு வழிச்சாலை வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு வேதனையளிக்கிறது" - வேல்முருகன்

"எட்டு வழிச்சாலை வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு வேதனையளிக்கிறது" - வேல்முருகன்

Veeramani

சேலம் - சென்னை 8 வழிச்சாலை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வேதனையளிக்கிறது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ பசுமை வழிச்சாலை என்பது உண்மையில், பசுமை அழிப்புச் சாலையாகும். இச்சாலைத் திட்டத்திற்கு சற்றொப்ப 5,750 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளன. இதில், ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பனை மரங்கள், 2 இலட்சம் தென்னை மரங்கள், 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள், அழியவுள்ளன.

சேலம் கஞ்சமலை, திருவண்ணாமலை கவுத்தி வேடியப்பன் மலை, சேத்துப்பட்டு மலை, ஜருகு மலைக் காடுகள், நீப்பத்துத்துறை தீர்த்தமலைக் காடுகள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறுவாஞ்சூர் உள்ளிட்ட பாதுகாப்பட்ட பல்வேறு வனப்பகுதிகள், இயற்கை வளங்களையும்,  தனது பசுமையையும் இழக்கவுள்ளன. இந்த மலைகளாலும், காடுகளாலும்தான் தமிழ் நாட்டின் கோடைக் காலங்களின்போது, வெப்ப சலனத்தால் மழை பொழியும் மேகங்கள் உருவாகின்றன. தருமபுரி, வேலூர், கிருட்டிணகிரி, சேலம், திருவண்ணாமலை, காஞ்சி, கடலூர், விழுப்புரம், திருச்சி, அரியலூர், நாகை உள்ளிட்ட பல மாவட்டங்கள் இதனால் மழை பெறுகின்றன. இனி, அது நடக்காது.

சேலம் மாவட்டத்தின் சேர்வராயன் மலையில் 53 இலட்சம் டன் பாக்சைட் தாது உள்ளது. சேலம் கஞ்ச மலையில் 7.5 கோடி டன் இரும்பு தாது உள்ளது. அரூர் மலைப் பகுதியில் மாலிப்டினம் தாது கிடைக்கிறது. திருவண்ணாமலையில் இரும்பு தாது, ஹெமடைட் மற்றும் மேக்னடைட் தாதுக்கள் உள்ளன. இவையெல்லாம், இதுவரை அப்பகுதியில் கண்டறியப்பட்ட இயற்கை வளங்கள். இவற்றையெல்லாம் எப்படிக் கொள்ளையடிக்கலாம் என ஜிண்டால், வேதாந்தா, அதானி போன்ற பெரும் நிறுவனங்கள் ஆண்டுக்கணக்கில் காத்துக் கிடக்கின்றன. இந்த நிறுவனங்களுக்கு இயற்கை வளங்களை தாரை வார்த்து விட்டு, அதில் வரும் கமிஷனை பெறுவதற்காகவே மோடி அரசும், எடப்பாடி அரசும் திட்டம் தீட்டியுள்ளது.

இந்த நிலையில், தங்களின் வாழ்வாதாராம் பறிபோவதைக் கண்டு கண்ணீர் விட்டு, விவசாயிகள், இளைஞர்கள், ஆர்வலர்கள் போராடி வருகின்றனர். அவர்களுக்கு உறுதுணையாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், அரசியல் அமைப்புகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் களத்தில் நிற்கின்றனர். அப்படி போராடி வருபவர்கள் மீது, அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டது எடப்பாடி அரசு. காவல்துறையை வைத்து அவர்களை அடித்து, துன்புறுத்தி சிறையில் தள்ளியது.

கடைசி நம்பிக்கையாக விவசாயிகள் நீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில், சேலம் - சென்னை 8 வழிச்சாலை தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  எனவே, நானும் விவசாயி, விவசாயிகளின் நண்பன் என்பன போன்ற வார்த்தை ஜாலங்களை விட்டு விட்டு, 8 வழிச்சாலை திட்டத்தை கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என தெரிவித்துள்ளார்