சுற்றுச்சூழல்

ஸ்டெர்லைட் ஆலை இந்த காரணத்துக்காகவே மூடப்பட்டது - வேதாந்தா நிறுவனம் குற்றச்சாட்டு

ஸ்டெர்லைட் ஆலை இந்த காரணத்துக்காகவே மூடப்பட்டது - வேதாந்தா நிறுவனம் குற்றச்சாட்டு

Veeramani

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட விவகாரம் முழுக்க முழுக்க அரசியல் காரணங்களுக்காக ஆனது என வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் குறை கூறியுள்ளது

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நீதிபதி சந்திரசூட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்டெர்லைட் ஆலை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம் 3 நாட்கள் தங்கள் தரப்பு வாதங்களை வைக்கவுள்ளதாக தெரிவித்தார், இதற்கு நீதிபதிகள் சம்மதம் தெரிவித்ததையடுத்து வாதங்களை முன் வைத்த அவர்,
முதலில் இந்த ஆலை ரத்னகிரியில் தான் அமைக்கப்பட இருந்தது, பின்னர் அந்த திட்டத்தை தமிழகத்துக்கு மாற்றி  ஆலை நிறுவப்பட்டது. காரணம் தமிழகம் தொழிற்சாலைகளுக்கு முக்கியத்துவம் வழங்கும் மாநிலம் என்பதால் இங்கு கொண்டு வரப்பட்டது



மேலும், தூத்துக்குடியில் பல ஆண்டுகளாக இயங்கி வந்த இந்த ஆலைக்கு திடீரென எதிர்ப்பு கிளம்பியது, திடீரென ஆலையை சுற்றி வசிக்கும் மக்கள் தங்கள் கண்களுக்கு ஆலை வெளியேற்றும் புகையால் பாதிப்பு ஏற்படுவதாக கூறினர், அதன் பின்னர் ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு முடிவெடுத்தது.
ஆனால் இதுபோன்ற எந்த விசயத்துக்கும் அறிவியல் பூர்வ ஆதரமும் இல்லை
 
ஸ்டெர்லைட் ஆலை எந்த காற்று மாசையும், சுற்றுசூழல் மாசையும் ஏற்படுத்தவில்லை என்று சமர்பிக்கப்பட்ட அறிக்கை அடிப்படையில் தான் தேசிய பசுமை தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்கியது. ஆலை விரிவாக்கம்  செய்ய நடவடிக்கை தொடங்கியபோது தான் ஆலை மாசு ஏற்படுத்துகிறது என்ற பிரச்னை எழுப்பப்பட்டு அது பெரிதானது.


மேலும் , ஆலைக்கு எதிராக தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் கல் வீச்சு சம்பவங்களிலும், பிற வன்முறைகளிலும் ஈடுபட்டனர். இதனைதொடர்ந்து தான் அங்கு துப்பாக்கிசூடு நடத்தப்பட்டுள்ளது, இதற்கும் ஆலைக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த ஆலை மூடப்பட்டுள்ளதால் இந்தியாவின் காப்பர் உற்பத்தி ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளது.

4000 தொழிலாளர்களுக்கு நேரடியாகவும் 40,000 பேருக்கு மறைமுகமாகவும் 2 லட்சம் பேர் இந்த தொழிற்சாலையுடன் தொடர்புடைய தொழில்கள் செய்கிறவர்கள் ஆவர். உலகின் பல இடங்களில் எங்கள் நிறுவன ஆலை உள்ளது, எந்த இடத்திலும் இந்த ஆலை அல்லது நாங்கள் மாசு ஏற்படுத்துகிறோம் என்ற குற்றச்சாட்டு இல்லை.

ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்ய தமிழக அரசு தான் அனுமதி வழங்கியது,  ஆனால் அந்த அனுமதி உத்தரவு வெளி வந்த பின்னர் சிலர் ஆலைக்கு எதிரான பிரச்சனைகள் செய்ய தொடங்கினர், அதன் பின்னரே மொத்த நிலைமையும் மாறியது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது முழுக்க அரசியல் உள்நோக்கம் கொண்டது ஆகும்.



குறிப்பாக எதிர்கட்சி, ஆளும் கட்சி என தமிழகத்தில் உள்ள கட்சிகளும் ஆலை விவகாரத்தை மேற்கோள்காட்டி அரசியல் செய்தன என வாதங்களை முன்வைத்தார். இதனையடத்து இன்றைய அலுவல்கள் நிறைவடைந்ததை அடுத்து ஸ்டெர்லைட் ஆலை வழக்கு மீதான விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.