பூமியின் மொத்த பரப்பளவில் 71 சதவிகிதம் நீரினால் சூழப்பட்டுள்ளது. மீதமுள்ள 29 சதவிகிதம் தான் நிலப்பரப்பு.
பருவநிலை மாற்றத்தால் பனிப்பாறைகள் மற்றும் அடுக்குகள் உருகி வருகின்றன. அதனால் ஒவ்வொரு நாளும் கடல் நீரின் மட்டம் உயர்ந்து கொண்டே வருகிறது.
இந்நிலையில் அண்டார்டிகாவில் உள்ள இரண்டு மிகப்பெரிய பனிப்பாறைகளான பைன் தீவு மற்றும் த்வைட்ஸ் பனிப்பாறைகள் வேகமாக உருகி வருவதாகவும், இதனால் கடல் நீரின் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருவதாகவும் பருவ நிலை மாற்றம் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு வரும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மேற்கு அண்டார்டிகாவின் அமுண்ட்சென் கடலின் கரையோரத்தில் அமைந்துள்ள பைன் தீவு மற்றும் த்வைட்ஸ் பனிப்பாறைகள் இதுவரை உருகியதால் உலகளவில் சுமார் 5 சதவிகிதத்திற்கு கடல் நீர் மட்டம் உயர காரணம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவும், பிரிட்டனும் பல மில்லியன் டாலர்களை செலவு செய்து அண்டார்டிகாவில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த இரண்டு பனிப்பாறைகளும் தற்போது அதன் இயல்பு நிலையை இழந்து உருக ஆரம்பித்துள்ளதால் எதிர்வரும் ஆண்டுகளில் அண்டார்டிகாவில் உள்ள மற்ற பனிப்பாறைகளும் உருக வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதனால் பத்து அடி வரை கடல் நீர் மட்டம் உயர வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.