சத்தியமங்கலம் அருகே தாளவாடி மலைப்பகுதியில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்ததால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இரவு நேரத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் அருகாமையில் உள்ள கிராமங்களில் புகுந்து விவசாயிகள் பயிரிட்ட வாழை, கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்துவது தொடர்கதையாக உள்ளது.
இந்த நிலையில் இன்று சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 6 காட்டு யானைகள், தாளவாடி அருகே உள்ள அருள்வாடி கிராமத்திற்குள் புகுந்தன. அங்கு விவசாயிகள் பயிரிட்டுள்ள மக்காச்சோளம் ராகி உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தின.
வழக்கமாக காட்டு யானைகள் காலை நேரத்தில் வனப்பகுதிக்குள் சென்று விடும் நிலையில், இன்று மதியம் வரை காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் செல்லாமல் விவசாய விளை நிலங்களில் சுற்றித் திரிந்தன. இதைக் கண்ட கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் அச்சம் அடைந்தனர்.
காட்டுயானைகள் கிராமத்திற்குள் நுழையாமல் தடுப்பதற்காக கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து விவசாய விளை நிலத்தில் சுற்றி திரிந்த காட்டு யானைகளை சத்தம் போட்டும் பட்டாசுகள் வெடித்தும் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.
இதில் 7 யானைகள் காட்டுக்குள் சென்றுவிட்ட நிலையில், மீதமுள்ள 6 யானைகள் மானாவாரி நிலத்தில் முகாமிட்டுள்ளதால் விவாசயிகள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு, யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.