பழக்கும் விதத்திலும் பழகும் விதத்திலும் காட்டு யானையும் கனிந்துவிடும் என்பதற்கு உதாரணமாக நீலகிரி மாவட்டம் கூடலூரில் மூன்று பேரை கொன்ற காட்டு யானை சங்கர் வளர்ப்பு யானையாக மாறி மனிதர்களோடு நெருங்கி பழகி வருகிறது.
நீலகிரி மாவட்டம் கூடலூரில் தந்தை மகன் உட்பட மூன்று பேரை கொன்ற காட்டுயானை சங்கரை, அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு மேலாக வனத்துறையினருக்கு போக்கு காட்டிவந்த காட்டுயானை சங்கர் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி பிடிபட்டது. பிடிபட்ட நாள்முதல் முதுமலை புலிகள் காப்பகத்தில் மரக்கூண்டில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது.
ஆரம்பத்தில் ஆக்ரோஷமாக காணப்பட்ட யானை, பாகன்களின் கட்டளைகளுக்கு பழகி இப்போது அவர்களிடம் தும்பிக்கையை நீட்டி கரும்புகளை கேட்டு வாங்கி உண்ணும் அளவிற்கு பழகியுள்ளது. யானையை ஒரு கரும்புத் துண்டுடன் நெருங்கும் அளவிற்கு பாகன்கள் பழகியுள்ளனர். யானை பாகன்கள் மற்றும் வனத்துறையினரிடம் இருந்து கரும்புகளை வாங்கி உண்ணும் சங்கர், மனிதர்களுடன் நெருங்கிப் பழகத் தொடங்கிவிட்டது.