முதன்முறையாக உடல் எடை பரிசோதனைக்கு அழைத்து வரப்பட்ட வளர்ப்பு யானை சங்கர், அச்சத்தால் முரண்டு பிடித்து கடைசி வரை எடை மேடையில் ஏறாத காரணத்தால் வனத்துறையினர் திருப்பி அழைத்துச் சென்றனர்.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் பராமரிக்கப்படும் வளர்ப்பு யானைகளுக்கு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை உடல் எடை பரிசோதனை மேற்கொள்ளப்படுவது வழக்கம். அதற்காக முகாமில் உள்ள யானைகள் தொரப்பள்ளி பகுதியில் உள்ள எடை மேடைக்கு அழைத்து வரப்பட்டன.
இந்நிலையில், முகாமின் புதிய வளர்ப்பு யானையான சங்கரும் உடல் எடை பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்டது. வளர்ப்பு யானை சங்கர் கடந்த ஆண்டு கூடலூர் அருகே தந்தை மகன் உட்பட மூவரை கொன்ற நிலையில் பிடிக்கப்பட்டு தற்போது வளர்ப்பு யானையாக மாற்றப்பட்டிருக்கிறது.
சங்கர் யானை முழுவதுமாக வளர்ப்பு யானையாக மாறி உள்ள நிலையில், முதன்முறையாக இன்று தெப்பக்காட்டில் இருந்து தொரப்பள்ளி பகுதியிலுள்ள எடை மேடைக்கு கொண்டுவரப்பட்டது. மற்ற வளர்ப்பு யானைகளை போல சங்கரை எடை மேடையில் ஏற்றுவதற்கு பாகன்கள் முயற்சி செய்தனர். ஆனால், எடை மேடையில் ஏறுவது முதல் முறை என்பதால் சங்கர் யானை முரண்டு பிடித்தது.
பாகன்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் சங்கர் யானையை எடை மேடையில் ஏற்ற முடியவில்லை, இதனால் வனத்துறையினர் கும்கி யானை உதவியுடன் சங்கரை எடை மேடையில் ஏற்ற முயற்சி செய்தனர், ஒருகட்டத்தில் முரண்டு பிடித்த சங்கர் எடை மேடை அருகே உட்கார்ந்து எழுந்திரிக்க மறுத்தது
பொதுவாக முகாமுக்கு வரும் புதிய வளர்ப்பு யானைகள் இதுபோன்று அச்சமடைந்து முரண்டு பிடிப்பது வழக்கம் தான் என்றும், அடுத்த முறை மற்ற யானைகள் உடன் அழைத்து வந்து உடல் எடை பரிசோதனை செய்யப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.