சுற்றுச்சூழல்

’கழிவுகளை முறையாக கையாளவில்லை’ - மே.வங்க அரசுக்கு ரூ.3500 கோடி அபராதம் விதித்த தீர்ப்பாயம்

’கழிவுகளை முறையாக கையாளவில்லை’ - மே.வங்க அரசுக்கு ரூ.3500 கோடி அபராதம் விதித்த தீர்ப்பாயம்

Sinekadhara

திட மற்றும் திரவ கழிவு உற்பத்தி மற்றும் சுத்திகரிப்பு ஆகியவற்றை முறையாக கையாளாததால் மேற்கு வங்க அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் ரூ.3500 கோடி அபராதம் விதித்துள்ளது.

நகர்ப்புற வளர்ச்சி மற்றும் நகராட்சி மேம்படுத்தலுக்காக மே. வங்க அரசு 2022-23 பட்ஜெட்டில் ரூ.12,818.99 கோடியை ஒதுக்கியிருந்தபோதிலும் கழிவுநீர் மற்றும் திடக்கழிவு மேலாண்மை வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று தெரிவித்திருக்கிறது பசுமை நீதிமன்றம். மேலும், சுகாதாரப் பிரச்னைகளை நீண்ட காலத்திற்கு ஒத்திவைக்க முடியாது என்றும், மாசு இல்லாத சூழலை வழங்குவது மாநிலம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுடைய அரசியலமைப்பின் பொறுப்பு என்றும் கூறியுள்ளது.

நகர்ப்புறங்களில் ஒரு நாளில் 2,758 மில்லியன் லிட்டர் கழிவுநீர் உற்பத்தியாகிறது. இதை சுத்திகரிக்க 1,505.85 MLD சுத்திகரிப்பு திறன் தேவைப்படுகிறது. அதற்கு 44 STP களை அமைக்கவேண்டும். ஆனால் அங்கு 1,268 MLD மட்டுமே சுத்திகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 1,490 MLD என்ற பெரிய இடைவெளி உருவாகிறது என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் ஒரு மனிதனின் வாழ்வுரிமையில் அடிப்படை மனித உரிமை மற்றும் அரசின் முழுமையான பொறுப்பு ஒரு பகுதியாக இருப்பதால், நிதிப் பற்றாக்குறையை காரணம்காட்டி அத்தகைய உரிமையை மறுக்க முடியாது என்றும் கூறியிருக்கிறது. மத்திய அரசிடமிருந்து நிதியைப் பெறுவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்றாலும், மாநிலம் அதன் பொறுப்பைத் தவிர்க்கவோ அல்லது சாக்குபோக்குக் காட்டி அதனை தாமதப்படுத்தவோ முடியாது என்றும் கூறியிருக்கிறது.

"மாநிலத்தின் சுற்றுச்சூழலுக்கு சேதம் ஏற்படுவதைக் கருத்தில் கொண்டு, விரைவில் அதனை சரிசெய்யவேண்டும் என்றாலும், கடந்த கால மீறல்களுக்கு இழப்பீடு அரசால் செலுத்தப்பட வேண்டும். திட மற்றும் திரவக் கழிவுகளின் முறையற்ற மேலாண்மைக்கு அபராதமாக ரூ. 3,500 கோடியாக மதிப்பிடப்படுகிறது. இது மேற்கு வங்க மாநிலத்தால் இரண்டு மாதங்களுக்குள் ஒரு தனி கணக்கிலிருந்து டெபாசிட் செய்யப்படவேண்டும். அங்கு இதே நிலை தொடர்ந்தால் கூடுதல் தொகையை செலுத்தவேண்டி இருக்கும்.

நீண்ட காலமாக தீர்ப்பாயத்தால் இந்தப் பிரச்னைகள் கண்டறியப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதை நாங்கள் அறிவோம். மாநில அரசு தனது மக்கள் மற்றும் அவர்களுக்கு ஆற்றவேண்டிய கடமையை உணர்ந்து செயலாற்ற வேண்டிய நேரம் இது’’ என்று என்ஜிடி தலைவர் நீதிபதி ஏ கே கோயல் அடங்கிய அமர்வு தெரிவித்துள்ளது.