நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகிலுள்ள கூந்தங்குளம், உலகின் முக்கிய பறவை சரணாலயங்களில் ஒன்று. ஆண்டுதோறும் 230க்கும் மேற்பட்ட பறவையினங்கள், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பறவைகள் இங்கு வருகின்றன.
இந்த சரணாலயத்தை சுற்றி உள்ள மக்கள் அனைவரும் பறவைகளை பாதுகாப்பவர்களாகவும் நேசிப்பவர்களாகவும் இருப்பது தனிச்சிறப்பு. இவர்களுக்கெல்லாம் ஒருபடி மேலே போய் பறவைகளை பாதுகாத்து வருகிறார் 'பறவை மனிதன்' என்று அழைக்கப்படும் பால்பாண்டி.
40 ஆண்டுகளுக்கும் மேலாக தினமும் பல மைல்கள் குளங்களிலும், கண்மாய்களிலும் அலைந்துத் திரிந்து பறவைகள் கட்டியிருக்கும் கூடுகள் பத்திரமாக உள்ளனவா என பார்ப்பதுதான் பால்பாண்டியின் முழுநேர வேலை.
பல சமயங்களில் கூடுகளில் இருந்து குஞ்சுகள் எகிறி கீழே விழுந்து விடும். அவைகளால் பறந்து மீண்டும் கூட்டில் ஏற முடியாது. இதற்காகவே காத்திருக்கும் நரி போன்ற சிறுவிலங்குகள் அவைகளை தின்றுவிடும் முன்பு, மீட்டெடுத்து மீண்டும் கூட்டில் சேர்ப்பார் இந்தப் பறவை மனிதன்.
பரந்து விரிந்த நெல்லை மாவட்டத்தில் எந்தெந்த இடங்களில் எந்தெந்தப் பறவைகள் கூடு கட்டியுள்ளன என்பது இவருக்கு அத்துப்படி. இன்னும் சொல்லப்போனால், இவரிடம் சொல்லிவிட்டுதான் கூடே கட்டுமோ என நாம் வியக்கும் வண்ணம் இவருக்கும், அந்தப் பறவைகளுக்கும் அத்தனை நெருக்கம் உண்டு.
இந்நிலையில் சமீபத்தில் விபத்து ஒன்றில் சிக்கி மீண்ட பால்பாண்டியின் ஒரே கவலை சொந்த வீடோ, சொகுசான வாழ்க்கையோ, தன் பிள்ளைகளின் எதிர்காலமோ அல்ல. எப்போதுமே அவருடைய கவலை அன்றைக்கு மீன் வாங்கத் தேவையான காசை எப்படி புரட்டுவது என்பதுதான்.
ஆம். எப்படியும் ஒரே நேரத்தில் நூறு பறவைக் குஞ்சுகளையாவது பால்பாண்டி தன்னுடைய பிள்ளைகளைப் போல பராமரித்து வருவார். தன்னிடம் கிடைக்கும், தான் ஈட்டும் பணம் அத்தனையும் செலவிட்டு மீன்கள் வாங்கி வந்து சொந்தப் பிள்ளைக்கு ஊட்டுவதைப் போல ஊட்டி விடுவார்.
பால்பாண்டியனின் ஒரே வருமானம், சரணாலயத்துக்கு வரும் உள்நாட்டு, வெளிநாட்டுப் பயணிகளுக்கு வழிகாட்டியாக இருந்து பெறும் சன்மானம் மட்டும்தான். ஆனால், கடந்த நான்கு மாதங்களாக கொரோனா பேரிடரால் பயணிகள் வருகை ஏதுமின்றி மிகவும் துன்பப்படுகிறார். இதற்கிடையில் இவருக்கு நேர்ந்த விபத்து வேறு.
இதுதொடர்பாக எழுத்தாளர் எஸ்.கே.பி.கருணா ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், ‘’சரணாலயம் மூடப்பட்டுள்ளது என்பது பறவைகளுக்குத் தெரியாதே. எனவே கூட்டிலிருந்து கீழே விழும் குஞ்சுகள் விழுந்து கொண்டுதான் இருக்கின்றன. அவைகளை மீட்டெடுத்து வளர்க்கும் பணி இவரால் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஒரே தேவை அவைகளுக்கு தினமும் மீன் வாங்கவும், இவரது வாழ்வாதாரத்துக்குமான பணம்தான். நண்பர்கள் உங்களால் இயன்றதை அவருக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கோருகிறேன்’’ எனக் குறிப்பிட்டிருந்தார்
இப்பதிவைத் தொடர்ந்து பால்பாண்டிக்கு உதவ நெல்லை மாநகர துணை கமிஷனர் அர்ஜுன் சரவணன் முன்வந்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்டிருந்த பதிவில், ‘’நெல்லையின் பறவை மனிதன். அவருடன் சேர்ந்து Bird watching சென்றுள்ளேன். நெல்லைக்கு பிளமிங்கோ வந்துள்ளதை அறிந்தபோது மணிக்கணக்கில் தேடி காண்பித்தவர். நண்பர்கள் உதவியுடன் ஒரு கணிசமான தொகையை அவருக்கு அளிக்கிறேன். முன்னெடுப்பிற்கு நன்றி.’’ என்று பதிவிட்டுள்ளார்.