சுற்றுச்சூழல்

குப்பைமேட்டை குறுங்காடாக மாற்றிய தென்காசி இளைஞர்கள்!

குப்பைமேட்டை குறுங்காடாக மாற்றிய தென்காசி இளைஞர்கள்!

JustinDurai
புதர்களும் பிளாஸ்டிக் கழிவுகளுமாக மண்டிக்கிடந்த இடத்தை சீரமைத்து, குறுங்காடு ஒன்றை உருவாக்கியுள்ளனர் தென்காசி இளைஞர்கள்.
 
தென்காசி நகருக்குள் நுழைந்ததுமே அப்பகுதிக்கே உரித்தான தென்றல் காற்று நம்மை வருடி வரவேற்கிறது. அத்துடன் இரண்டு பாலங்களுக்கு இடையே, குறுகிய பரப்பில் மரங்கள் சூழ்ந்து காட்சியளிக்கும் அந்த இடம் சாலையில் செல்வோரின் கவனத்தை வெகுவாக ஈர்க்கிறது. சூரிய ஒளி புகாவண்ணம் மரக்கிளைகள் நிலத்தை போர்த்தி குளுமையை படரவிட்டிருந்தது.
 
குறைந்த நிலப்பரப்பில், குறுகிய மாதங்களில் குறுங்காடுகளை வளர்க்க உதவும் தாவரவியல் தொழில்நுட்பமான 'மியாவாக்கி' முறையில் இந்த தோட்டத்தை உருவாக்கியுள்ளனர் ப்ராணா மரம் வளர் அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள்.
 
இவர்கள் மியாவாக்கி அடர் வனம் அமைப்பதற்கு பின்னணியில் ஃபிளாஷ்பேக் ஒன்று இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தென்காசியில் சமூகப் பணிகளில் ஈடுபட்டு வந்த அப்துல் ரஹ்மான் என்ற இளைஞர் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். அவரின் நினைவாக 'மியாவாக்கி' முறையில் ஒரு தோட்டம் உருவாக்கி பாராமரிப்பது என ப்ராணா மரம் வளர் அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் முடிவெடுத்தார்கள்.
 
தென்காசி ஆசாத் நகரில் இரு பாலங்களுக்கு இடையே அமைந்துள்ள நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான ஒரு சிறிய இடம், பிளாஸ்டிக் கழிவுகளும், முட்களும், புதர்களுமாக தரிசாக கிடந்துள்ளது. நெடுஞ்சாலைத்துறையிடம் அனுமதி பெற்று அந்த இடத்தை 'மியாவாக்கி' வனம் உருவாக்க தெரிவு செய்தார்கள்.
இதுகுறித்து ப்ராணா மரம் வளர் அமைப்பைச் சேர்ந்த சீனிவாசன் நம்மிடம் கூறுகையில், ‘’மரம் நடுவதற்கு முன்பு இந்த இடத்திலிருந்து 10 டிராக்டர் லோடு அளவுக்கு குப்பைக் கழிவுகளை சேகரித்து அப்புறப்படுத்தினோம். வேம்பு, அரசு, புளியமரம், இலுப்பை, மருதமரம், மூங்கில் என 45 வகையான, 750 நாட்டு மரக்கன்றுகளை 3 அடி இடைவெளியில் நடவு செய்தோம். நடவுப் பணியில் பள்ளி கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள், ஃபேஸ்புக் நண்பர்கள் உள்ளிட்ட பலரும் எங்களோடு கைக்கோர்த்தார்கள்.
 
மரக்கன்றுகளை நெருக்கமாக நடும்போது ஒளிச்சேர்க்கைக்காக மரங்கள் சூரிய ஒளியை தேடி ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக்கொண்டு வேகமாக வளர்கின்றன. இதனால் பத்து ஆண்டுகளில் ஒரு மரம் எவ்வளவு வளர்ச்சியடையுமோ, அந்த வளர்ச்சி இந்த முறையில் இரண்டே ஆண்டுகளில் கிடைத்து விடும்.
இந்த இடம் இப்போது பல்லுயிர் சூழலுக்கும் பயனளிக்கிறது. பறவைகள், தேனீ, வண்ணத்துப்பூச்சிகள், முயல், பூச்சியினங்கள் உள்ளிட்டவைகளும் இங்கே வசிக்கின்றன. அவைகளுக்கு தொந்தரவு இல்லாத வகையில் நாலாபுறமும் கம்பி வேலி சுற்றி அமைத்துள்ளோம். இத்தோட்டத்துக்கு அருகிலேயே குற்றால மலையில் உற்பத்தியாகும் சிற்றாறு பாய்கிறது. மரங்களுக்கு தேவையான தண்ணீரை அங்கிருந்து எடுத்துப் பாய்ச்சுகிறோம்.
 
முதல் முயற்சியே வெற்றிகரமாக அமைந்தது எங்களுக்கு மேலும் ஊக்கமளித்துள்ளது. அடுத்து மியாவாக்கி முறையில் மற்றொரு குறுங்காடு உருவாக்கவும் திட்டமிட்டுள்ளோம்’’ என்கிறார் அவர்.