சுற்றுச்சூழல்

கவ்விய மானுடன் சரசரவென மரம் ஏறும் சிறுத்தை : சிலிர்க்க வைத்த வீடியோ

கவ்விய மானுடன் சரசரவென மரம் ஏறும் சிறுத்தை : சிலிர்க்க வைத்த வீடியோ

jagadeesh

கொரோனா பாதிப்பில் நாடே ஊரடங்கில் அமைதியாக இருக்க, இதை எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஓர் உலகம் உயிர்ப்போடுதான் இயங்கிக்கொண்டு இருக்கிறது. ஆம், அவை வன விலங்குகளின் உலகம்தான். இந்த ஊரடங்கு காலத்தில் மக்களெல்லாம் வீட்டிலேயே முடங்கி இருக்க, ஆங்காங்கே வனப்பகுதியொட்டி இருக்கும் நகரங்களில் சில வனவிலங்குகள் மகிழ்ச்சியாக வெளியே உலாவிக்கொண்டு இருக்கின்றன.

இதுபோன்ற வீடியோக்களை வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அடிக்கடி பதிவிட்டு வருகிறார். இப்போது ஒரு புது வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அவர். அது ஒரு சிறுத்தை தன்னுடைய இரையை வாயில் கவ்வியபடி மரம் ஏறும் காட்சியைத்தான் பதிவிட்டுள்ளார். எப்படி ஒரு சிறுத்தையால் மிகவும் கனமான தன்னுடைய மான் இரையைத் தூக்கிக் கொண்டு லாவகமாக மரம் ஏற முடியும் என்பதற்கான விளக்கத்தையும் அளித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தென் ஆப்பிரிக்காவில் உள்ள குரூகர் தேசியப் பூங்காவில் எடுக்கப்பட்டுள்ளதாக கூறும் பர்வீன் கஸ்வான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் "இப்படி மரத்தில் ஏறுவது நினைத்துக் கூட பார்க்க முடியாது. ஆனால் அதுதான் உண்மை. ஒரு சிறுத்தையால் மூன்று மடங்கு எடைக்கொண்ட இரையைக் கவ்விக்கொண்டு அதனால் மரத்தில் ஏற முடியும். இந்த வீடியோ குரூகர் தேசியப் பூங்காவில் மார் 24 ஆம் தேதி எடுக்கப்பட்டது" என அதிசயத்தக்க தகவலைப் பகிர்ந்து ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

இதேபோல சுசந்தா நந்தா என்கிற வனத்துறை அதிகாரி அண்மையில், அழிந்து வரும் விலங்குகளின் பட்டியலில் உள்ள விலங்கான புனுகு பூனை ஒன்று கேரள மாநிலம் கோழிக்கோட்டில் சுதந்திரமாக வலம்வந்ததை பதிவிட்டிருந்தார். சுமார் 250 புனுகு பூனைகள் மட்டுமே உயிரோடு இருப்பதாகக் கூறப்படும் நிலையில், 1990 ஆம் ஆண்டுக்குப் பிறகு இதைப் பார்த்துள்ளதாகத் தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதேபோல உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில், சில மான்கள் சாலைகளில் உற்சாகமாக உலா வந்தன. இதேபோல சண்டீகரில் சாலையில் மான் ஒன்று சர்வசாதாரணமாகக் கடந்து சென்ற வீடியோவும் இந்த ஊரடங்கு காலத்தில் வைரலானது.