யானைகளை காட்டுக்குள் விரட்ட பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என வனத்துறைக்கு சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை வனப்பகுதியில் நாட்டு வெடி வைக்கப்பட்டிருந்த பழத்தை சாப்பிட்டபோது வெடி வெடித்து காயமடைந்த மக்னா யானை அப்பகுதியில் சுற்றித் திரிந்து வந்தது. யானையின் நாக்கு துண்டானதால் உணவுப்பொருட்களை சாப்பிட முடியாமல் சிரமப்பட்டது. இந்நிலையில் ஏற்கெனவே காயமடைந்த யானையை மேலும் காயப்படுத்தும் வகையில் வனத்துறையினர் யானையை மீண்டும் வனத்துக்குள் விரட்ட பட்டாசு வெடித்து முயற்சித்த செயல் ஏற்றுகொள்ளத்தக்கதல்ல எனவும், பட்டாசு வெடித்து அதை விரட்டிய வனத்துறையினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வனவிலங்கு நல ஆர்வலர்கள் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி யானை பரிதாபமாக இறந்து போனது.
இந்த மனு தொடர்பான வழக்கு நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது யானைகளை காட்டுக்குள் விரட்ட வெடிகள் பயன்படுத்தப்படுவதை தவிர்க்கவேண்டுமென வனத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் காயம்பட்ட யானைகளுக்கு சிகிச்சையளிக்க உரிய வழிகாட்டு நெறிமுறைகளை வனத்துறை பின்பற்ற வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வனவிலங்கு நல ஆர்வலர் அருண் பிரசன்னா கூறியபோது, ‘’நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஒவ்வொரு முறையும் யானை - மனித மோதலின்போது ஏற்படும் பாதிப்புகள் மற்றும் பின்விளைவுகளை நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லும்பொழுது பெரும்பாலும் மனிதர்களுக்குத்தான் தீர்ப்பு சாதகமாக அமைந்து விடுகிறது. இதற்கு வனத்துறையின் பங்கும் இருக்கிறது என்று எண்ணும்பொழுது மிகுந்த வேதனையாக இருக்கிறது. யானைகளை காட்டுக்குள் விரட்ட பட்டாசுகளை வெடிக்கக்கூடாது என வனத்துறைக்கு சென்னை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்று’’ என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.