அசாம் மாநிலத்தில் இருக்கும் புகழ்பெற்ற காசிரங்கா தேசியப் பூங்காவில் நீரில் பதுங்கி இருக்கும் வங்கப் புலி, பெண் காண்டாமிருகத்தை பார்த்ததும் பயந்து ஓடிய காட்சி வைரலாகி பதிவாகியிருக்கிறது.
காசிரங்கா தேசியப் பூங்கா ஒற்றை கொம்பு காண்டாமிருகத்துக்கு மிகவும் புகழ்பெற்றது. இந்த தேசியப் பூங்காவில் வங்கப் புலியும் அதிகளவில் வசிக்கின்றது. இந்த ஒற்றை கொம்பு காண்டாமிருகத்தை வேட்டைக்காரர்களிடம் காப்பாற்ற பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இங்கு பொது மக்களுக்கு சூழல் சுற்றுலாவும் அனுமதிக்கப்படுகிறது. மேலும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட வழிக்காட்டிகளும் இருக்கின்றனர்.
அப்படிப்பட்ட வழிக்காட்டி ஒருவரின் கேமராவில் அருமையான காட்சியொன்று பதிவாகியிருக்கிறது. இந்தக் காட்சியை படம்பிடிக்க அரை மணி நேரம் பொறுமை காக்க தேவையிருந்தது. அவரின் பெயர் பிஷ்வஜித் சேத்ரி. 25 வயதான இவர் காசிரங்கா தேசியப் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டியாக பணி புரிந்து வருகிறார். இவர்தான் புலியொன்றை காண்டாமிருகம் துரத்தும் காட்சியை பதிவு செய்திருக்கிறார்.
இது குறித்து பிஷ்வஜித் சேத்ரி கூறுகையில் "நான் சுற்றுலா பயணிகளை அழைத்துக்கொண்டு காட்டை சுற்றிக்காட்டி கொண்டிருந்தேன். அப்போது ஒரு குட்டையில் நல்ல உயரமான காண்டாமிருகம் நின்றுக்கொண்டு இருந்தது. அதே குட்டையில் உன்னிப்பாக கவனித்தபோது புலி ஒன்று பதுங்கியிருந்தது தெரிந்தது. அதனால் சுற்றுலாப் பயணிகளிடம் வேறு இடத்துக்கு செல்ல வேண்டாம், இன்னும் சற்று நேரத்தில் என்ன நடக்கிறது என்பதை கவனிக்கலாம் என்றேன்" என்றார்.
மேலும் பேசிய அவர் "சரியாக 30 நிமிஷம் கழித்து புலி பதுங்கியிருப்பதை காண்டாமிருகம் கண்டது. உடனடியாக புலியின் அருகே ஆக்ரோஷமாக சென்றது, இதனை பார்த்த புலி காண்டாமிருகத்தை கண்டு தலைதெறிக்க ஓடியது. இந்தக் காட்சியை என்னுடைய கேமராவில் முழுவதுமாக படம் பிடித்தேன். இதுபோன்ற நிகழ்வு காட்டில் எப்போதாவது நடக்க கூடியது. இதனை நேரில் பார்க்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது வாழ்வில் மறக்க முடியாதது" என்றார் பிஷ்வஜித் சேத்ரி