தாமிரபரணி ஆற்றின் கரையோரங்களில் இருந்து வெட்டி எடுக்கப்படும் மண்ணால், தாமிரபரணி ஆறு திசை மாறி ஓடி பல ஊர்களே அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிப்புள்ளாகும் பொதுமக்கள் பல புகார் மனுக்கள் கொடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது . புதிய தலைமுறை இது குறித்து தொடர்ந்து வெளியிட்டு வரும் செய்தி எதிரொலியாக, மூன்று நாட்களாக ஒரு சில பகுதிகளில் மண் அள்ளி எடுக்கும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. எனினும், இது தொடர்பாக நிரந்தர தீர்வு காண பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதுகுறித்த சிறு தொகுப்பை இங்கு காணலாம்.
குமரி மாவட்டத்தில் வற்றாத ஜீவ நதி தாமிரபரணி நதி. இந்த நதிக்கரை ஓரங்களில், பல பகுதிகளில் செங்கல் சூளைகள் அமைத்து, அங்கிருந்து ஆற்றை ஒட்டி உள்ள பல பகுதிகளில் மண் அள்ளி எடுத்து வருகின்றனர். இதனால் இந்த ஆற்றின் கரை ஓரங்களில் உள்ள பல பகுதிகளில், மழை காலங்களில் ஆறு திசை மாறி ஓடி, பொதுமக்கள் பல்வேறு வகையிலான பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.
குறிப்பாக உண்ணாமலைக்கடை அருகே தச்சன் விளைப்பகுதியில், சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கும் நிலையில் உள்ளதுடன், பல வீடுகள் சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையில் பெரும் பாதிப்பை சந்தித்தது. இதனைத் தொடர்ந்து இந்தப் பகுதியை சேர்ந்த பாதிக்கப்பட்டு வரும் மக்கள் வருவாய்த்துறை, காவல் துறை என பல துறைகளுக்கு புகார் கொடுத்தும் எந்த பலனும் அளிக்கவில்லை.
இந்நிலையில் இந்தப் பகுதி மக்கள் புதிய தலைமுறைக்கு தகவல் தெரிவித்து, புதிய தலைமுறை இது குறித்து பல முறை செய்தி வெளியிட்டு வருவதுடன் இதுகுறித்து பல அதிகாரிகளிடம் இதுகுறித்து விளக்கம் கேட்டு அதையும் செய்தி வெளியிட்டது. இதைத் தொடர்ந்து மூன்று நாட்களாக இந்தப்பகுதியில் அனுமதி இல்லாமல் மண் அள்ளி வருவது தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்தப் பகுதி உட்பட பல பகுதிகளில், அரசு விதிமுறைகளை மீறி மண் அள்ளி எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பகுதியில் வாழும் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் இந்த தாமிரபரணி ஆற்றை பாதுகாப்பதுடன், இந்த ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள், பல ஆண்டுகள் உழைத்து சம்பாதித்து வாங்கிய நிலங்களையும், அதில் வைக்கப்பட்டுள்ள வீடுகளையும் பாதுகாக்க வேண்டும் என இந்த பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.
அரசாங்கம், முறையாக நடவடிக்கை எடுக்காவிட்டால், இந்த கொள்ளை கும்பல், இந்தப் பகுதி ஏழை மக்களின் சொத்துக்களை மிரட்டி, குறைந்த விலைக்கு வாங்கி மண்ணை கொள்ளை அடிக்கும் என்பதும் அம்மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது. மேலும் பல கிராமங்கள் ஆற்றுநீர் புகுந்து அழியும் அபாயம் உள்ளதால், விரைவில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.