சுற்றுச்சூழல்

தண்ணீர்வரத்து அதிகரிப்பு - களக்காடு தலையணையில் குளிக்கத் தடை!

தண்ணீர்வரத்து அதிகரிப்பு - களக்காடு தலையணையில் குளிக்கத் தடை!

Sinekadhara

தொடர் மழையால் களக்காடு தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரித்ததை அடுத்து அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

நெல்லை மாவட்டம் களக்காடு புலிகள் காப்பக வனப்பகுதியில் தலையணை அமைந்துள்ளது. இந்த தலையணையில் உள்ள தடுப்பணையில் குளிப்பதற்காகவும், பார்ப்பதற்காகவும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருவது வழக்கம். இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே இந்த பகுதியில் சாரல் மழை பெய்து வந்தது. இன்று அதிகாலை தலையணை பகுதிக்கு மேலே உள்ள அடந்த வனப்பகுதிகளான செங்கல்தேரி, கோழிகால் ஓடை போன்ற பகுதிகளில் கனமழை பெய்ததால் தலையணையில் காலையில் இருந்தே தண்ணீர் வரத்து அதிகரித்தது. மேலும் தலையணைக்கு வரும் தண்ணீர் கலங்கிய நிலையில் ஆர்ப்பரித்து வந்தது.

இதனால் தலையணையிலுள்ள தடுப்பணையில் இறங்கி குளிக்கமுடியாத அளவிற்கு அதிக அளவில் தண்ணீர் கொட்டியது. இதனால், களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குநர் ரமேஷ்வரன் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி தலையணையில் குளிக்க தடை விதித்தார். அதேசமயம் சுற்றுலாப் பயணிகள் தலையணை பகுதிக்கு நேரடியாக வந்து பார்வையிட அனுமதி அளித்துள்ளார்.

தலையணை பகுதியில் குளிக்கக்கூடாது என்பதற்காக அந்த பகுதியில் கயிறுகள் கட்டி சுற்றுலாப்பயணிகள் உள்ளே செல்லாதவாறு பாதுகாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தலையணையில் தண்ணீர் குறைந்து குளிக்கும் அளவிற்கு சூழ்நிலை ஏற்பட்டால் உடனடியாக குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.