நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தை உயிரிழந்தது தொடர்பாக வனத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள கொளப்பள்ளி, 10 லைன்ஸ் பகுதியில் அரசு தேயிலைத் தோட்டம் உள்ளது. நேற்று காலை அங்குள்ள தொழிலாளர்கள் பணிக்கு செல்லும்போது தேயிலை செடிகளுக்கு இடையே புலி ஓடியதாக வனத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் தேயிலை தோட்டத்தில் சென்றது புலி அல்ல, சிறுத்தை என்பதை உறுதி செய்தனர். இதையடுத்து சிறுத்தையை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் முயன்றனர். ஆனால் சிறுத்தை தேயிலை தோட்டத்தை விட்டு நகராமல் அங்கேயே இருந்துள்ளது.
இதையடுத்து சிறுத்தை உடல்நலம் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகித்த வனத்துறையினர் அதனை மீட்டு சிகிச்சை அளிக்க முடிவெடுத்தனர். இதனைத்தொடர்ந்து, தேயிலை செடிகளுக்கு இடையே பதுங்கியிருந்த சிறுத்தையை தேடிய போது அது உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளது.
உயிரிழந்து கிடந்தது பெண் சிறுத்தை என்றும் அதற்கு சுமார் 3 வயது இருக்கும் எனவும், அதன் தொடைப்பகுதியில் காயங்கள் இருப்பதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு இறப்பிற்கான உண்மையான காரணம் தெரியவரும் எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.