சுற்றுச்சூழல்

இந்த ஆந்தையை பார்த்திருக்கிறீர்களா ?

இந்த ஆந்தையை பார்த்திருக்கிறீர்களா ?

jagadeesh

பொதுவாகவே ஆந்தை என்றால் நமது நினைவிற்கு முதலாக வருபவை, நமது வீட்டிற்கு அருகில் இரவு நேரத்தில் கரன்ட் கம்பிகளின் மீதோ அல்ல வேறு எதாவது சிறிது உயரமான இடத்தில் உட்கார்ந்து கொண்டோ, கண்களை உருட்டியபடி அலறிக் கொண்டிருக்கிற புள்ளி ஆந்தைதான்.

நம்மூரில் உருவத்தில் சிறிதும் பெரிதுமானவையாகவும், சில நிற வேற்றுமைகளுடனும், பலவகை ஆந்தைகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றான பூமன் ஆந்தை பற்றித்தான் இன்றைக்கு பார்க்கப் போகிறோம். இவ்வகை ஆந்தைகள் சமவெளி முதல் சற்று உயரமான மலைப்பகுதிகள் வரை இயல்பாக காணக்கூடியவை. காடுகளுக்குள், இவற்றை குறிப்பாக நீர் நிலைக்கு அருகில் காணலாம்.

மனிதர்களைக் கண்டால் அமர்ந்திருக்கும் இடத்தைவிட்டு அவ்வளவு எளிதாக பறந்து விடாத பயமற்ற பறவை இது. இங்கே, இப்ப ஒரு சுவாரஸ்யமான நிகழ்வைச் சொல்லப் போகிறேன். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் என நினைக்கிறேன். பந்திப்பூர் காடுகளில் காலை முதல் மாலைவரை, வனத்துறை வாகனத்தில் புலிகளைத் தேடி சுற்றித் திரிகிறோம்.

ஒளி மங்கிக் கொண்டிருக்கிற மாலை நேரம். விலங்குகளை தேடி ஒரு நீர் நிலையை நோக்கிச் செல்கிறோம். திடீரென ஒரு சலனம், தரையிலிருந்து பறந்து ஒரு மரக்கிளையை நோக்கி ஒரு பறவை. இல்லையில்லை அங்கே, இரு பறவைகள் உயரக் கிளம்பி மரத்தில் அமர்ந்தது. வாகனத்தை நிறுத்தி எச்சரிக்கையாக கவனத்துடன் கவனிக்கத் துவங்கினோம்.

உற்றுப் பார்த்தால், பறந்தது ஒரு பறவைதான். மற்றொன்று தலையில்லாத உயிரற்ற உடலுடன் அந்த, பூமன் ஆந்தையின் கால்களில் சிக்கியிருந்தது. வேகமாக சில புகைப்படங்களை எடுத்து முடித்தோம். சிறிது நேரந்தான் அங்கே அமர்ந்திருந்தது. அதற்குள் சட்டெனப் பறந்து, இன்னும் சற்று தொலைவிலிருந்த மற்றொரு சற்று அடர்ந்த மரத்திற்கு இறந்த பறவையை தூக்கிச் சென்றது.

அங்கு ஏதோ அசைவு அதிகமானது போல தெரிந்தது. மற்றொரு பறவையுடன் சண்டையிட்டது போல தோன்றியது.சாதாரணமாக கண்களுக்கு குறைவான ஒளியில், என்ன நடக்கிறது என எங்களால் சரியாக தெரிந்து கொள்ள முடியவில்லை. கேமராவின் வழியாக பார்க்கும்போது. மற்றொரு ஆச்சரியம் அங்கே காத்திருந்தது...

அங்கு மற்றுமொரு பூமன் ஆந்தை. அது இதன் இணையாக இருக்கலாம். வேட்டையாடிச் சென்றது ஒரு பெண். உருவத்தில் சற்று காத்திருந்ததைவிட பெரிதாக இருந்ததை வைத்துச் சொல்கிறேன். இதன் குஞ்சாகவும் அது இருக்கலாம். மற்றொரு ஆச்சரியம் அதன் காலில் இருந்த இரைப்பறவை. அது ஒரு இளம் பிராயத்து "வாக்கா" (Night heron-ராகொக்கு).

இந்தப் படத்தை பார்த்தபின் பலரும் சொன்னார்கள். பூமன் ஆந்தைகள் இதுவரை யாரும் ராக்கொக்கை இரையாக அடித்ததை பார்த்ததுமில்லை. படமும் எடுத்ததில்லை என்றுகூட சொன்னார்கள்.  இந்த வகை ஆந்தைகள் பொதுவாக மீன்களையும், சிறு பறவைகளையுமே முக்கிய உணவாக கொண்டிருக்கும். இருவருக்கு உணவு தேவை என்பதால் பெரியதாக அடித்து விட்டதோ என்னவோ!...

காடு எத்தனையோ ஆச்சரியங்களை தமக்குள் கொண்டிருக்கிறது. அது நமக்கு நாளும் எதாவது கற்றுக் கொடுத்துக் கொண்டேதான் இருக்கிறது.

கட்டுரை, சூழலியலாளர்: ராமமூர்த்தி ராம்
படங்கள்: திவ்யபாரதி ராமமூர்த்தி