தண்டாவாளத்தில் உலாவரும் யானைகள் கோப்புப் புகைப்படம்
சுற்றுச்சூழல்

யானைகளால் பயணிகளுக்கும், பயணிகளால் யானைகளுக்கும் ஆபத்து - என்னதான் தீர்வு

தண்டவாளங்களில் யானைகள் வரும்போது ரயிலை நிறுத்த முடியாது. யானைகள் ரயிலில் மோதி உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது.

PT WEB

எழில் கொஞ்சும் இயற்கையின் வனப்புகளை ரசித்துக் கொண்டே நீலகிரி மலை ரயிலில் பயணிப்பது பயணிகளுக்கு அலாதி பிரியத்தை தந்தாலும், யானைகளால் பயணிகளுக்கும், பயணிகளால் யானைகளுக்கும் ஆபத்து ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது. இந்த மனித விலங்கு மோதல்களை தடுப்பது எப்படி?

விண்ணை முட்டும் அழகிய மலைகள், கண்ணுக்கெட்டிய தூரமெல்லாம் அடர் வனங்கள், காணும் இடமெங்கும் தேயிலை தோட்டங்கள், கண்களைக் கவரும் அழகிய நீர் வீழ்ச்சிகள் என பசுமை நிறைந்த நீலகிரி மலை தொடரில் ரயில் பயணம் செய்வது என்பது இயற்கையோடு இணைந்து உரையாடுவது போன்றது. கண்களுக்கும், மனதுக்கும் விருந்தாக அமையும் இந்த பயணத்தில் காட்டு யானைகளின் குறுக்கீடுகள் அச்சுறுத்தலாகவே இருக்கின்றன.

நீலகிரி மலை ரயில்

இதுகுறித்து சுற்றுலா ஆர்வலர் ரமேஷ் கூறுகையில், ''ரயில் பயணத்தின் போது தண்டாவாளங்களில் யானைகள் உலா வருகின்றன. யானைகள் உலா வருவது பயணிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்குகிறது. மலை ரயில் பயணத்தை விரும்புவோரின் பாதுகாப்பை உறுதி செய்வது வனத்துறையின் கடமை. அதே நேரம் ரயில் வழித்தடங்களில் குறுக்கே வரும்போது, யானைகளின் உயிருக்கும் உத்தரவாதம் இல்லாத சூழல் நிலவுகிறது. மலை ரயிலை இயக்குவதற்கு முன் தண்டவாளங்களை சோதிக்க வேண்டும். ரயில் வழித்தடங்களில் யானைகள் இருந்தால் அப்புறப்படுத்த வேண்டும்.'' என்கிறார் அவர்.

சமூக ஆர்வலர் ஆனந்த் கூறுகையில், ''தண்டாவாளங்களில் யானைகள் வரும்போது ரயிலை நிறுத்த முடியாது. யானைகள் ரயிலில் மோதி உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது'' என்கிறார் அவர்.

தண்டாவாளத்தில் உலாவரும் யானைகள்

வனவிலங்கு ஆர்வலர் சிவா கூறுகையில், ''பயணிகள் நெகிழிப் பைகளில் அடைக்கப்பட்ட தின்பண்டங்களை வாங்குகின்றனர். குழந்தைகள் தின்பண்டங்களை சாப்பிட்டு நெகிழிகளை தண்டாவாளங்களில் போடுகின்றனர். நெகிழிகளை சாப்பிடும் யானைகள் உயிரிழக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றன. பயணிகளிடம் நெகிழி பரிசோதனை, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நெகிழிகள் கட்டுப்படுத்தப்பட்டால் யானைகள் உயிரிழப்பு தடுக்கப்படும்'' என்கிறார் அவர்.

இது போன்ற மனித விலங்கு மோதல்களைத் தடுக்க பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். தங்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் அவர்கள் காத்திருக்கின்றனர்.