சுற்றுச்சூழல்

ஓராண்டுக்கு பின்னர் மீண்டும் தொடங்கியுள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா!

ஓராண்டுக்கு பின்னர் மீண்டும் தொடங்கியுள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா!

jagadeesh

மாசுபடாமல் எங்கும் கொட்டி கிடக்கும் இயற்கை வளம், காணுமிடமெல்லாம் பசுமை, கண்ணுக்கெட்டிய தூரம் வரை சுத்தமான தண்ணீர் என்பதெல்லாம் தற்போது வெகு அரிதாய் கிடைக்கும் பொக்கிஷங்களாக மாறிவிட்டன. மேற்குத்தொடர்ச்சி மலையில் இன்னும் இயற்கை சூழல் மாறாமல் தூய்மையான காற்று, அடர்ந்து வளர்ந்த மரங்கள், மலை முகடுகளில் வளைந்து நெளிந்து நளினமாய் ஓடும் பவானி ஆறு.

இதில் தாகம் தீர்க்கும் வனவிலங்குகள், மண் மனம் மாறாத பழங்குடியின மக்கள் என முற்றிலும் இயற்கை அன்னையின் அரவணைப்பால் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட அழகில் நிரம்பி உள்ளது, கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணையின் நீர்தேக்க பகுதியான பரளிக்காடு. இயற்கையை நேசிக்கும் சுற்றுலா பயணிகளுக்கென இங்கு வனத்துறை சார்பில் சூழல் சுற்றுலா நடத்தப்பட்டு வந்தது.

பாதுகாப்பான பரிசல் பயணம், வனத்தினுள் ட்ரக்கிங், ஆற்று நீர் குளியல், பழங்குடியின மக்கள் சமைத்து தரும் பாரம்பரிய மதிய உணவு என ஒரு நாள் பகல் பொழுதை கழித்து செல்ல ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவர். இந்நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக இந்த சூழல் சுற்றுலா ரத்து செய்யப்பட்டது. கொரோனா வைரசின் தாக்கம் குறைந்து படிப்படியாக பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதிலும் பரளிக்காடு சூழல் சுற்றுலா மட்டும் தொடங்கப்படவில்லை.

பல்வேறு சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டு விட்ட நிலையில் சூழல் சுற்றுலாவையும் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுத்த நிலையில் இன்று பத்தாம் தேதி முதல் வழக்கம்போல் பரிளிக்காடு சூழல் சுற்றுலா துவங்கப்படும் என வனத்துறை அறிவித்து அதற்கான முன்னேற்பாடுகளை செய்து வந்தது. இதன்படி ஓராண்டு இடைவெளிக்கு பின்னர் இன்று காலை சூழல் சுற்றுலா துவங்கியது. முதல் நாள் என்பதால் குறைந்த எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகள் வந்திருந்தாலும் வெகு உற்சாகத்துடன் பரிசல் பயணத்தோடு மீண்டும் சூழல் சுற்றுலா துவங்கியது.