சுற்றுச்சூழல் ஆர்வலரான 18 வயதாகும் கிரேட்டா தன்பெர்க், சி.ஓ.பி.26 மாநாட்டில் கலந்துக்கொண்ட அரசியல் தலைவர்கள் அனைவரும், ‘‘பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பதற்கு தீவிரமான நடவடிக்கைகளை எடுப்பதுபோல எல்லோரும் நடித்துக்கொண்டிருக்கின்றனர்” என விமர்சனம் செய்துள்ளார்.
உலக நாடுகளை சேர்ந்த அரசியல் தலைவர்கள் பலரும் பிரிட்டனின் க்ளாஸ்க்ளோவ் பகுதியை சேர்ந்த எஸ்.இ.சி. (Scottish Event Campus) அருகே ‘பருவநிலை மாற்றம்’ குறித்த சி.ஓ.பி.26 (COP26) மாநாட்டில் கலந்து கொண்டிருக்கின்றனர். இதையொட்டி, க்ளாஸ்க்ளோவ் பகுதியிலுள்ள பார்க் ஒன்றின் அருகே சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் தன் 'Fridays for Future’ அமைப்பினரை இணைத்து பேரணியொன்றை நடத்தியிருந்தார். அதில் தன் ஆதரவாளர்களிடம் பேசுகையில், “உள்ளே இருக்கும் தலைவர்கள் மூலம் எவ்வித மாற்றமும் நிகழாது. தனிநபர்களின் ஆளுமையே மாற்றத்தை கொண்டுவரும். கடந்த சி.ஓ.பி. மீட்டிங் போலவே இதுவும் எல்லா விதத்திலும் பயனற்றுதான் இருக்கும். பயன் தரப்போகாத இந்த மீட்டிங் வழியாக, நிஜமாகவே தாங்கள் எதையோ மாற்றப்போவதுபோல அவர்கள் நடித்துக்கொண்டிருக்கிறார்கள்.
தொடர்புடைய செய்தி: "புவி வெப்பமயமாதல் எங்களுக்கு மரண தண்டனை" – ஐநா சபையில் தீவு நாடுகள் குமுறல்
ஏற்கெனவே பருவநிலை மாற்றத்தால் மிக மோசமாக தாக்கப்பட்டிருக்கும் இந்த மக்களுக்காக அதிகாரத்திலுள்ள அரசியல் தலைவர்களெல்லாம் நடிக்கின்றனர். உண்மையில், மாற்றமென்பது அவர்களிடமிருந்து வராது. அது அங்கிருந்து வராது; நம்மிடமிருந்தே வரும். ஏனெனில், உள்ளே நிகழ்வதுபோல நாம் எந்தவகையான உளறல்களையும் இங்கே நிகழ்த்தவில்லை. போலவே நாம் மக்களையோ இயற்கையையோ இந்த பூமியையோ சுரண்டலுக்கு உட்படுத்தக்கூடாதென்றே கூறுகிறோம். அவர்களிடம் பருவநிலை மாற்றம் குறித்து பேசி பேசி நாம்தான் சோர்வாகிவிட்டோம். ஆகவே இனி அவர்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ, மாற்றத்துக்கான முன்னெடுப்பை நாமே எடுப்போம்” என முழக்கமிட்டுள்ளார்.