சுற்றுச்சூழல்

பட்டாம் பூச்சிகள் வலசை செல்வதில் தாமதம்

பட்டாம் பூச்சிகள் வலசை செல்வதில் தாமதம்

webteam

பருவமழை தள்ளிப்போனதால் பட்டாம் பூச்சிகள் வலசை செல்வது தாமதமாகியுள்ளது, இதனால் இயற்கை சமன்பாடு மாறுவதாக பட்டாம்பூச்சி ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மண்ணில் பறந்து திரியும் வானவில் தான் பட்டாம் பூச்சி. வானில் தோன்றும் வானவில்லில் ஏழு நிறங்கள் மட்டுமே இருக்கும். ஆனால் பட்டாம் பூச்சிகள் பல வண்ணங்களில் பரவசப்படுத்தும். அதற்கேற்றார் போல் அதற்கு வண்ணத்துப்பூச்சி என்று மற்றொரு பெயரும் உண்டு. கண் இமைகள் மூடித் திறப்பதையும் வண்ணத்துப்பூச்சியின் சிறகு படபடவென்று அடிப்பதையும் கவிஞர்கள் ஒப்பிடுவார்கள். எனவே தான் வண்ணத்துப்பூச்சிகள் திறந்த கண்ணை மூட விடாமல் திகைக்க வைக்கின்றன.

மலைக்காடுகளிலும் அடர்ந்த வனங்களிலும் அரியவகை தாவரங்கள் மற்றும் மலர்கள் பரவி இருப்பதற்கு பட்டாம் பூச்சிகளே காரணம். சின்னஞ்சிறிய பட்டாம்பூச்சிகள் பெரும் உயிரினமான யானையைப் போல் வலசை செல்லும் வழக்கம் கொண்டவை. 

தென்மேற்கு பருவமழை தொடக்க காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைக்காடுகளில் இருந்து லட்சக்கணக்கில் புறப்படும் வண்ணத்துப்பூச்சிகள் வானை அலங்கரித்தபடி கிழக்கு தொடர்ச்சி மலைக்காடுகளை சென்றடையும். அங்கு இனப்பெருக்கம் செய்யும் பட்டாம் பூச்சிகள் வடகிழக்கு பருவமழை காலத்தில் மீண்டும் மேற்கு தொடர்ச்சி மலைக்காடுகளுக்கு திரும்பும். வண்ணத்துப் பூச்சிகளின் இந்த இடப்பெயர்ச்சி காலம்காலமாக நடக்கும் ஓர் இயற்கை நிகழ்வு. 

இந்நிலையில் பட்டாம் பூச்சிகள் இந்தாண்டு இதுவரை தங்கள் வலசைப் பயணத்தை தொடங்கவில்லை. BUTTERFLY HOTSPOT என்று பூச்சியியல் அறிஞர்களால் போற்றப்படும் கோவை மாவட்டம் கல்லாரில் நடத்தப்பட்ட ஆய்வில் பட்டாம்பூச்சிகள் வலசை செல்லாதது தற்போது தெரியவந்துள்ளது.

தென்மேற்கு பருவமழை தள்ளிப்போனதால் வண்ணத்துப் பூச்சிகளின் பயணமும் தாமதமாகியுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து ஆயிரம் மீட்டர் உயரத்திற்கு மேலுள்ள சோலைக்காடுகளும் மழை இல்லாமல் காய்ந்துகிடக்கின்றன. சோலைக்காடுகளுக்கே இந்த சோக நிலையென்றால் சமவெளிக் காடுகளைப் பற்றி கேட்பானேன்? அங்கும் அதே நிலைதான். வண்ணத்துப்பூச்சி என்பது ஓர் இயற்கையின் குழந்தை. அதன் வாழ்வில் ஏற்படும் ஒரு மாற்றம் இயற்கையிலும் எதிரொலிக்கும்.