Wildlife Safari  India-Safaris
சுற்றுச்சூழல்

சில்லென்ற பருவமழைக் காலம்; ஜங்கிள் சஃபாரி போக ஆசையா?– இதோ சிம்பிள் பட்ஜெட்டில் 8 இடங்களின் பட்டியல்!

இந்த பருவமழைக் காலத்தில் நீங்கள் சுற்றிப் பார்க்கக்கூடிய இந்தியாவின் சிறந்த 8 வனவிலங்கு சஃபாரி இதோ..

Justindurai S

சாகசங்களில் ஈடுபடாமல் ஒருபோதும் பருவமழைக் காலம் நிறைவடையாது. மலை ஏற்றம், நீர் விளையாட்டுகள் போன்ற சாகசங்களுக்கு மழைக்காலம் தான் சரியானதாக இருக்கும். மேலும் இந்தக் குளிர்ச்சியான மழைக்காலத்தில் நம் நாட்டின் பல்வேறு வகையான வனவிலங்குகளை கண்டு ரசிக்க ஆசைப்படுகிறீர்களா? இதோ, இந்தியாவின் சிறந்த வனவிலங்கு சஃபாரி குறித்து நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம்.

Nagarhole National Park, Karnataka

1. நாகர்கோல் தேசியப் பூங்கா, கர்நாடகா

நாகர்கோல் தேசிய பூங்கா வனவிலங்கு ஆர்வலர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை தரக்கூடியதாக இருக்கும். ராஜீவ் காந்தி தேசிய பூங்கா என அழைக்கபடும் இந்த வனவிலங்கு காப்பகம், கர்நாடகாவின் மைசூர் பீடபூமிக்கும் தமிழ்நாட்டின் நீலகிரி மலைக்கும் இடையே 247 சதுர மைல் பரப்பளவில் அமைந்துள்ளது. இப்பூங்காவின் அருகிலேயே கபினி ஆறு பாய்கிறது. இங்கிருக்கும் பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை பார்வையிடுவதற்காகவே நாடெங்கிலும் இருந்து வனவிலங்கு ஆர்வலர்களும் புகைப்படக் கலைஞர்களும் இங்கு வருகை தருகிறார்கள்.

கம்பீரமான வங்காளப் புலிகளுக்கும் ஆசிய யானைகளுக்கும் இப்பூங்கா மிகவும் பிரசித்தி பெற்றது. சிறுத்தைகள், தேன் கரடிகள், கழுதைப் புலிகள், காட்டெருமைகள், மிளா போன்ற பல்வேறு விலங்குகளும் இங்குள்ளது. அதுமட்டுமின்றி இங்கு அளவுக்கு அதிகமான பறவைகள் காணப்படுவதால் பறவை ஆர்வலர்களுக்கு இப்பூங்கா சொர்க்கபுரியாக திகழ்கிறது.

காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையில், தினமும் இரண்டு முறை பார்வையாளர்களின் வசதிக்காக குதிரை சஃபாரியை வனத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

சஃபாரி கால அளவு: 2 மணி நேரம்

டிக்கெட் விலை: 250 முதல் 300 ரூபாய் வரை

Bandipur National Park, Karnataka

2. பந்திப்பூர் தேசிய பூங்கா, கர்நாடகா

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியின் நடுவே, கர்நாடகாவின் சமராஜநகர் மாவட்டத்தில் உள்ள மைசூர் – ஊட்டி நெடுஞ்சாலை ஓரமாக அமைந்துள்ளது பந்திபூர் தேசியப் பூங்கா. தேசியப் பூங்காவான இது, 872.24 சதுர கிமீ பரப்பளவைக் கொண்டுள்ளது. இப்பூங்கா நாகர்கோல் தேசியப் பூங்கா, கேரள வனவிலங்கு சரணாலயம் மற்றும் தமிழ்நாட்டின் முதுமலை வனவிலங்கு சரணாலயம் என மூன்று சரணாலயத்தை தனது எல்லைகளாகக் கொண்டுள்ளது. இவை அனைத்தும் நீலகிரி உயிர்க்கோள காப்பகத்தின் முக்கியமான பகுதிகளாகும்.

புலிகள் மற்றும் யானைகளின் வாழ்விடங்களை பார்வையிடுவது மட்டுமல்லாமல் தேன் கரடிகள், காட்டெருதுகள், மலைப்பாம்பு, நரிகள், முதலைகள், நாற்கொம்பு மான் போன்ற அரிதான விலங்குகளையும் பார்வையாளர்கள் இங்கு கண்டு ரசிக்கலாம். இப்பூங்கா காலை 6 மணி முதல் மாலை 6 மனி வரை திறந்திருக்கும். வேன் மற்றும் ஜீப் சஃபாரிகள் உள்ளது.

சஃபாரி கால அளவு: 45 நிமிடங்கள் (பேருந்து சஃபாரி), 2 முதல் 3 மணி நேரம் (ஜீப்)

டிக்கெட் விலை: பேருந்து சஃபாரி – ஒரு நபருக்கு 350 ரூபாய்; ஜீப் – 3,000 ரூபாய்.

Daroji Sloth Bear Sanctuary, Karnataka

3. தாரோஜி தேன் கரடி சரணாலயம், கர்நாடகா

வரலாற்றுச் சிறப்புமிக்க ஹம்பி அருகே அமைந்துள்ளது தாரோஜி தேன் கரடி சரணாலயம். இப்பகுதிகளில் அதிகமாகக் காணப்படும் தேன் கரடியை பாதுகாப்பதற்காக இந்த சரணாலயம் நிறுவப்பட்டுள்ளது. கர்நாடகாவின் பெல்லாரி மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்தச் சரணாலயம், 82.7 சதுர கிமீ பரப்பளவு கொண்டது.

பாறைகளும் முட் செடிகளும் நிறைந்த இச்சரணாலயத்தில் தேன் கரடிகள் மட்டுமின்றி சிறுத்தைகள், காட்டுப் பன்றிகள், கீரிப்பிள்ளை, கழுதைப்புலி, எறும்புண்ணி, முள்ளம்பன்றி போன்ற விலங்குகளும் வாழ்கின்றன. அதோடு 100 வகையான பறவையினங்களும் வண்ணத்துப்பூச்சிகளும் இங்கு காணப்படுகின்றன.

தேன் கரடிகள் இரவாடி என்பதால், இந்தச் சரணாலயம் மாலை 4 மணி முதல் 6 மணி வரை மட்டுமே திறந்திருக்கும். இங்கு அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கோபுரத்தில் நின்றபடி காட்டில் ரோந்து செல்லும் கரடிகளையும் விலங்குகளையும் நீங்கள் பார்வையிடலாம். மேலும், இங்கு சஃபாரி வசதியும் வழிகாட்டியும் உள்ளார்கள்.

சஃபாரி கால அளவு: 2 மணி நேரம்

டிக்கெட் விலை: ஒரு நபருக்கு 50 ரூபாய்

Mhadei Wildlife Sanctuary, Goa

4. மாதேய் வனவிலங்கு சரணாலயம், கோவா

வடக்கு கோவாவின் வால்போ அருகே அமைந்துள்ள மாதேய் வனவிலங்கு சரணாலயத்தில் கருஞ்சிறுத்தை முதல் விஷப்பாம்பு வரை பல வகையான விலங்குகள் இருப்பதோடு அரிதான பல உயிரினங்களுக்கும் இது வாழ்விடமாக இருக்கிறது. 208 சதுர கிமீ பரப்பளவு கொண்ட இந்தச் சரணாலயம், இப்பகுதியில் உள்ள வங்காளப் புலிகளை பாதுகாப்பதற்காக 1999-ம் ஆண்டு நிறுவப்பட்டது.

இப்பகுதிகளில் உள்ள பசுமைமாறா காடுகள் தேன் கரடிகள், காட்டெருது, செம்மான், மிளா, சிறுத்தை, கீரிப்பிள்ளை, புனுகுப் பூனை, காட்டுப் பூனை, காட்டுப் பன்றி, சருகு மான், முயல், மலை அணில், பறக்கும் அணில், புலிகள் எனப் பல வகையான விலங்குகளுக்கு உறைவிடமாக இருக்கிறது. மேலும் இந்தச் சரணாலயத்தில் பல்வேறு வகையான பூச்சிகள், செடிகள், பறவைகள் இருக்கின்றன.

இந்தியாவில் அதிகமானோருக்கு தெரியாத சரணாலயம் என்று கூட இதைக் கூறலாம். பருவமழைக் காலங்களில் மாதேய் வனவிலங்கு சரணாலயத்திற்குச் சென்றால், மாதேய் ஆற்றில் நீர் விளையாட்டுகளில் ஈடுபடலாம். டிரெக்கிங், மலை ஏற்றம் போன்றவற்றில் ஈடுபடலாம். பகல் நேரத்தில் இந்தச் சரணாலயத்திற்குச் சென்றால் உங்களுக்கு உதவியாக வழிகாட்டியும் வருவார்.

சுற்றுலா கால அளவு: 2 மணி நேரம்

டிக்கெட் கிடையாது. இலவசமாக செல்லலாம்.

Ranthambore National Park, Rajasthan

5. ரந்தம்பூர் தேசியப் பூங்கா, ராஜஸ்தான்

ராஜஸ்தானில் உள்ள சவாய் மாதாப்பூர் நகரின் அருகே இப்பூங்கா அமைந்துள்ளது. இந்தியாவில் வனவிலங்கு சுற்றுலாவிற்கு பெயர் பெற்ற ஒன்றாக ரந்தம்பூர் தேசிய பூங்கா விளங்குகிறது. நீங்கள் நேரடியாக அதன் வாழ்விடத்திற்கே சென்று புலியின் கம்பீரத்தையும், வேட்டையாடுவதையும் பார்க்க வேண்டும் என விரும்பினால், அதற்கு நீங்கள் ரந்தம்பூர் தேசியப் பூங்கா சென்றால் போதும். இங்கு புலிகளின் அதிக எண்ணிக்கையில் காணப்படுகிறது.

இந்த தேசியப் பூங்காவின் உள்ளேயே ரந்தம்பூர் கோட்டை அமைந்துள்ளது. சுற்றிலும் மலைகளும் பள்ளத்தாக்குகளும் சூழ்ந்துள்ளதால் சுற்றுலாவாசிகளின் விருப்பத்துக்குரிய இடமாகவும் இப்பூங்கா இருக்கின்றது. புலிகளை தவிர்த்து, சிறுத்தைகள், கழுதைப் புலிகள், மிளா, புள்ளி மான், கொம்பு மான், சாம்பல் நிற குரங்கு, முதலைகள் என பல்வேறு வகையான விலங்குகளுக்கு வாழ்விடமாக இப்பூங்கா இருக்கின்றது.

பருவமழைக் காலங்களில் இப்பூங்கா பார்வையாளர்களுக்கு திறந்திருக்கும். இங்கு சஃபாரி செல்லும் வசதிகள் உள்ளது. இப்பூங்காவின் 6,7,8,9,10-வது மண்டலங்கள் மற்றும் புலிகள் வாழும் மூன்று பகுதிகள் வருடம் முழுவதும் திறந்திருக்கும்.

சஃபாரியின் கால அளவு: 3.5 மணி நேரம்

டிக்கெட் விலை: ஒரு நபருக்கு 1,700 ரூபாய்

Periyar National Park, Kerala

6. பெரியார் தேசிய பூங்கா, கேரளா

கேரளாவில் உள்ள தேக்கடியில் இருக்கும் பெரியார் வனவிலங்கு சரணாலயம் 777 சதுர கிமீ பரப்பளவிற்கு பரந்து விரிந்துள்ளது. உங்கள் கண்ணைக் கவரும் அழகை கொண்டுள்ள இந்தச் சரணாலயம் பல்லுயிர் வளம் நிறைந்தது.

புலிகளுக்கும் யானைகளுக்கும் பாதுகாப்பான இடங்களில் ஒன்றாக இருக்கும் இச்சரணாலயம், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது. மேலும் இது பலவகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு உறைவிடமாகவும் திகழ்கிறது. சரணாலயத்தின் நடுவில் அழகான ஏரி ஒன்று இருக்கிறது. அழகான பெரியார் பள்ளத்தாக்கை பசுமைமாறா வெப்ப மண்டல காடுகள் சூழ்ந்துள்ளது. ஆகையால் இந்த இடம் இயற்கை ஆர்வலர்களுக்கு மிகச்சிறந்த இடமாக நிச்சயம் இருக்கும்.

புலிகள், யானைகளை தவிர்த்து, மிளா, காட்டெருது, சருகு மான், செம்மான், காட்டு நாய் போன்ற விலங்குகளும் நாரை, நீர்க்காக்கை, மீன் கொத்திப் பறவை, மலபார் இருவாச்சி பறவை போன்ற பல பறவையினங்களும் இங்கு காணப்படுகின்றன. ஜீப் சஃபாரி, யானை சஃபாரி அல்லது ஆற்றில் படகு சவாரி செல்லும் போது காட்டின் வனாந்தரத்தை நீங்கள் கண்டு ரசிக்கலாம்.

சஃபாரி கால அளவு: காலை 5.30 முதல் மாலை 3.30 வரை (முழு நாள் சஃபாரி)

டிக்கெட் விலை: ஒரு நபருக்கு 2,500 ரூபாய் (ஓரு ஜீப்பில் அதிகபட்சம் ஆறு நபர்கள் செல்லலாம்)

Jim Corbett National Park, Uttarakhand

7. ஜிம் கார்பெட் தேசியப் பூங்கா, உத்தரகாண்ட்

கண்ணைக் கவரும் அழகான உத்தரகாண்ட் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள ஜிம் கார்பெட் தேசிய பூங்கா, 1936-ம் ஆண்டு நிறுவப்பட்டது. இது இந்தியாவின் முதல் புலிகள் காப்பகம் ஆகும். புகழ்பெற்ற இயற்கை ஆர்வலரும் வன உயிரின பாதுகாவலருமான ஜிம் கார்பெட்டின் பெயர் இப்பூங்காவிற்கு சூட்டப்பட்டுள்ளது. இப்பூங்கா நானிடாலுக்கு அருகே இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது.

1318.54 சதுர கிமீ பரப்ளவிற்கு பரந்து விரிந்துள்ள இப்பூங்கா, வங்காள புலிகளை பாதுகாப்பதற்காக அமைக்கபட்டது. இங்கு குரங்குகள், தேன் கரடிகள், ஆசிய கரடிகள், கீரிப்பிள்ளை, காடுப் பூனைகள், யானைகள், காட்டெருதுகள், பல வகையான மான்கள் என பல வகையான விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. அதுதவிர இந்த சரணாலயத்தில் 600 வகையான பறவையினங்கள் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்பூங்காவில் உள்ள 5 வெவ்வேறு மண்டலங்களில் ஜீப் சஃபாரியும் குதிரை சஃபாரியும் உள்ளது.

சஃபாரி கால அளவு: 3.5 மணி நேரம்

டிக்கெட் விலை: ஒரு ஜீப்பிற்கு 5,000 ரூபாய் ( ஒரு ஜீப்பில் 6 நபர்கள், 5 முதல் 12 வயதிற்குட்பட்ட இரண்டு குழந்தைகள் செல்லலாம்)

Tadoba National Park, Maharashtra

8. தடோபா தேசியப் பூங்கா, மகாராஷ்டிரா

தடோபா அந்தாரி புலிகள் காப்பகம் என்றும் அழைக்கப்படும் தடோபா தேசியப் பூங்கா, மகாராஷ்டிரா மாநிலத்தின் சந்திராபூர் மாவட்டத்தில் உள்ளது. 1955-ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்தப் பூங்கா, மூன்று வெவ்வேறு வனப்பகுதிகளாக பிரிந்து 625.4 சதுர கிமீ பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. இங்கு பல்வேறு வகையான தாவரங்களும் விலங்கினங்களும் இருக்கின்றன.

வனவிலங்கு ஆர்வலர்கள் மற்றும் இயற்கை விரும்பிகளுக்கு இந்தச் சாரணலாயம் சொர்க்கபுரி என்றே கூறலாம். தேக்கு மற்றும் மூங்கில் காடுகள், கரடு முரடான மலையுச்சிகள், பசுமை புல்வெளிகள், ஏரிகள் என விலங்குகள் வாழ்வதற்கு ஏற்ற வளமான காடாக இது இருக்கிறது. இங்குள்ள காடுகளில் புலிகள் ராஜ்ஜியம் செலுத்துகின்றன. புலிகள் மட்டுமல்லாமல் சிறுத்தைகள், தேன் கரடிகள், ஓநாய்கள், மான், காட்டெருமை, கழுதைப் புலி போன்ற பயங்கரமான விலங்குகளும் இங்கு உயிர் வாழ்கின்றன. இவைதவிர சதுப்பு நில முதலைகள், அருகிவரும் இந்திய மலைப்பாம்பு போன்ற ஊர்வனங்களும் அதிகளவில் உள்ளன. மேலும் நுற்றுக்கணக்கான பறவையினங்கள், வண்ணத்துப்பூச்சிகள் இங்கு உள்ளன. நீங்கள் இப்பூங்காவிற்கு வருகை தந்தால் அது மறக்க முடியாத அனுபவமாக உங்களுக்கு இருக்கும். இந்தச் சரணாலயத்தில் ஜீப்பில் சஃபாரி செல்லும் வசதி உள்ளது.

சஃபாரி கால அளவு: 4 மணி நேரம்

டிக்கெட் விலை: ஒரு ஜீப்பிற்கு 5,500 ரூபாய் (ஆதிகபட்சம் ஒரு ஜீப்பில் 6 பேர் செல்லலாம்)