சுற்றுச்சூழல்

காட்டுத் தீயினால் சாம்பல் காடான பந்திப்பூர் !

காட்டுத் தீயினால் சாம்பல் காடான பந்திப்பூர் !

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுகியில் கடந்த சில நாள்களாகவே காட்டுத் தீ கட்டுகடங்காமல் பற்றி எரிந்து வருகிறது. தமிழகத்தில் முதுமலை வன சரணாலயித்தில் கடந்த வாரம் கொழுந்துவிட்டு எரிந்த காட்டுத் தீ, தற்காலிகமாக அடங்கிய நிலையில். இப்போது, கர்நாடக மாநிலத்தின் எல்லையில் இருக்கும் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் பெரும் காட்டுதீ இயற்கையை நாசம் செய்து வருகிறது. கடந்த சில நாள்களில் மட்டும் 127 காட்டு தீ விபத்துகள் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஏராளமான சிறு மற்றும் குறு தாவரங்கள் தீயிற்கு இரையாகி இருப்பதாக வனத்துறையினர் கவலை தெரிவித்துள்ளனர். பந்திப்பூருக்கு காட்டுதீ புதியதல்ல என்றாலும் இம்முறை ஏராளமான ஹெக்டரில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பந்திப்பூர் புலிகள் காப்பக ஊழியர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு உதவியாக முதுமலை புலிகள் காப்பகத்திலிருந்து 25 தீ தடுப்பு காவலர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுடன் தீயணைப்பு துறையினரும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுகின்றனர். காட்டுத்தீ காரணமாக பல ஏக்கர் மரங்கள், புற்கள் மற்றும் தாவரங்கள் எரிந்து சாம்பலாகின. பச்சைபசேல் என எப்போதும் காட்சியளிக்கும் பந்திப்பூர் இப்போது சாம்பல் காடாக காட்சியளிக்கிறது.

சிறு விலங்குகளின் நிலை என்ன ? 

பந்திப்பூர் காட்டுத் தீயினால் சிறு மிருகங்கள், புலிகள், சிறுத்தைகளின் நிலை இப்போது என்ன என்று தெரியவில்லை. பந்திப்பூரில் சாம்பார் வகை மான்களும், காட்டு முயல்கள் ஏராளம். இப்போது காட்டு முயல்களும், சாம்பார் மான்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. பந்திப்பூர் மொத்தம் 247 ச.கி.மீ. பரப்புள்ள காட்டுப் பகுதி. புலிகள் சரணாலயமும் இந்தியாவின் மிகவும் முக்கியமான பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி.

2014 ஆம் ஆண்டு  எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி இங்கே 400-க்கும் அதிகமான புலிகள் இருப்பதாகப் புள்ளிவிவரம் கூறுகிறது. இந்தியாவிலுள்ள பெரும்பாலான யானைகள் இந்த வனப் பகுதியில்தான் காணப்படுகின்றன. கர்நாடகத்திலுள்ள பந்திப்பூர் தேசிய பூங்காவும், நாகர்ஹோலே தேசிய பூங்காவும், தமிழ்நாட்டிலுள்ள முதுமலை பகுதியையும், கேரள மாநிலத்தின் வயநாடு பகுதியையும் ஒட்டியிருப்பவை. இந்தக் காட்டுத் தீயின் காரணமாக மூவாயிரம் ஹெக்டர் காட்டுப் பகுதி சாம்பலாக்கி இருக்கிறது.