சுற்றுச்சூழல்

ஆட்டிஸக் குழந்தைகளை கையாள்வது எப்படி?

webteam

இன்று ஆட்டிஸ விழிப்புணர்வு நாள்.

ஆட்டிச பாதிப்புடைய குழந்தைகளுக்கு மொழி, சமூக வளர்ச்சி, விளையாடும் விதம் பாதிக்கப்பட்டிருக்கும். இவை தவிர மற்ற செயல்பாடுகளில் இயல்பான குழந்தைகளைப் போலவே தான் இருப்பார்கள். இந்தக் குழந்தைகளின் பழக்க வழக்கம், நடை மற்றும் மேனரிஸத்தில் வித்தியாசம் தெரியாது. இயல்பான குழந்தைகளை விடவும் ஞாபகசக்தி அதிகமாக இருக்கும்.

ஆட்டிஸக் குழந்தைகளுக்கு 3 வயதான பிறகு அவர்களது தனித்திறன்களைக் கண்டறிவது சுலபம். மிகுந்த பொறுமையுடன், அவற்றைக் கண்டறிந்து தகுந்த பயிற்சியும், பெற்றோரின் புரிதலும், அரவணைப்பும் இருந்தால் மற்ற குழந்தைகளைப்போல சாதாரண பள்ளிகளில் இவர்களையும் சேர்ப்பது சாத்தியமே.

ஆட்டிசக் குழந்தைகள் அனைவரும் அதீதமான தனித்திறனுடன் இருப்பார்கள். குழந்தைகளிடம் இருக்கும் தனித்திறமைகளை பெற்றோர் தேட வேண்டும். அந்தத் தேடுதலை ஆரம்பிக்காதபோதுதான், அவர்களைக் கையாள்வதில் சிரமம் ஏற்பட்டு, பெற்றோர் மிகுந்த மன உளைச்சல் கொள்வதுடன், அந்தக்குழந்தைகளையும் சிறப்புப் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டிய நிலை ஏற்படுகிறது.

ஆட்டிசக் குழந்தைகளை, நம்பிக்கை குன்றிய குழந்தைகளாகவோ, சாதனையாளர்களாகவோ உருவாக்குவதில் பெற்றோருக்கு மட்டுமே அதிகமான வாய்ப்புகளும், வழிகளும் இருக்கின்றன. பெற்றோரும், சமூகமும் ஆட்டிஸக் குழந்தைகளை மாறுபாடு கொண்ட எண்ணத்துடன் அணுகாமல், அக்குழந்தைகளின் திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்தினால், நாளைய சாதனை மனிதர்கள் அவர்கள்தான்.