சுற்றுச்சூழல்

சுற்றுலாத் தலங்களை திறந்த அரபுநாடுகள்! குடும்பத்துடன் குதூகலித்த தமிழரின் நேரடி அனுபவம்!

சுற்றுலாத் தலங்களை திறந்த அரபுநாடுகள்! குடும்பத்துடன் குதூகலித்த தமிழரின் நேரடி அனுபவம்!

sharpana

கோரானாவால் உலக நாடுகள் தங்கள் எல்லைகளை மூடி வைத்துக்கொண்டிருக்கும் நிலையில், அரபுநாடுகள் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்து மீண்டும் எல்லைகளை திறந்துள்ளன. அதுமட்டுமல்ல, சுற்றுலாத்தலங்களையும் திறந்து வைத்து, இவ்வளவு நாட்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடந்த மக்களை குதூகலப்படுத்தியிருக்கின்றன. கொரோனாவால் பாதிக்கப்பட்ட தங்கள் பொருளாதாரத்தை மீட்கும் நடவடிக்கையாக இந்த அறிவிப்பு பார்க்கப்படுகிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (துபாய்) சுற்றுலாவை மீண்டும் ஆரம்பித்திருக்கும்  முதல் மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றாகும்.

இதுகுறித்து துபாய் கார்ப்பரேஷன் சுற்றுலா தலைமை அதிகாரி இசாம் காசிம்,  “அரபு எமிரேட்ஸ் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு மற்றும் உடல்நலத்தில் பெருமளவு அக்கறை கொண்டுள்ளது. அதற்காகவே, நிறைய முதலீடும் செய்துள்ளது. இத்தனைநாள் வீட்டுக்குள்ளிருந்த மக்களை வரவேற்க காத்திருக்கிறோம். துபாய்க்கு சுற்றுலா ஒரு முக்கியமான தூண் என்பதால் நாங்கள் மகிழ்ச்சியோடு காத்திருக்கிறோம்” என்கிறார் உற்சாகமுடன். துபாயின் மொத்த  உள்நாட்டு உற்பத்தியில் 11.5  சதவீத வருவாய் சுற்றுலா மூலமே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

யூசுஃப் ரியாஸ்

அரபுநாடுக்களில் ஒன்றான கத்தாரிலோ உள்நாட்டினருக்கு மட்டும் சுற்றுலாத்தலங்களை திறந்துவிட்டிருக்கிறார்கள். அங்கு வசிக்கும் தமிழரான யூசுஃப் ரியாஸ், ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் தனது குடும்பத்தினருடன் பல மாதங்கள் கழித்து பீச்சிற்கு சென்ற பேரனுபவத்தை நம்முடன் பூரிப்புடன் பகிர்ந்துகொள்கிறார். 

 “பெரியவர்களைவிட கொரோனா சூழல் குழந்தைகளுக்குத்தான் பெரிதும் மன அழுத்தத்தைத் கொடுத்தது. தினமும் பள்ளிக்குச் சென்று வந்தவர்களை பல மாதங்களாக வீட்டில் அடைத்தே வைத்திருப்பது குழந்தைகளுக்கு மட்டுமல்ல. பெற்றோர்களுக்கும் சிரமத்தைக் கொடுத்தது. என் ஆறு வயது மகள் ஹதியாவும், இரண்டு வயது மகன் அயானையும் பார்த்துக்கொள்ளவே எங்களுக்கு நேரம் போதவில்லை. குழந்தைகள் வீட்டிலேயே அடைத்து வைத்துப் பார்த்துக்கொள்வது சாதாரண விஷயமல்ல. ஏனென்றால், சாதாரண நாட்களைவிட இப்போது வீட்டிலேயே இருப்பதால் அதிகம் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். இதனால், நம்மை அறியாமலேயே குழந்தைகளிடம் கோபம் கொப்பளிக்கிறது. கடைக்குச் கிளம்ப கதவைத் திறந்தாலே ’நானும் வர்றேன்… நானும் வர்றேன்’ என்று அடம்பிடித்து அழுதார்கள். ஒரேயொரு நாள் மனது பொறுக்காமல் வாசலுக்கு அழைத்துச்சென்றேன். ரொம்ம்ம்ம்ம்ப ஹேப்பியாகி விட்டார்கள். கொரோனாவால் பக்கத்துவீட்டுக் குழந்தைகளுடன்கூட, அவர்களால் விளையாட முடியவில்லை.

கத்தார் பீச்சில் குழந்தைகளை மகிழ்விக்கும் யூசுஃப் ரியாஸ் மனைவி லதிஃபா

  இப்படியொரு கொடூரமான சூழலில்தான், கடந்தவாரம் கத்தாரில் ஊரடங்கைத் தளர்த்தி சுற்றுலா தலங்களுக்கும் பூங்காக்களுக்கும் செல்ல அரசு அனுமதித்தது. அறிவிப்பு வந்த ஒரு நொடியிலேயே எங்கள் எல்லா மன அழுத்தங்களும் குறைந்தது போன்று நிம்மதியாக இருந்தது. குழந்தைகளோடு முதலில் நாங்கள் சென்றது பீச்தான். கத்தாரில் அழகான நிறைய பீச்சுகள் உள்ளன. அதில், குடும்பத்தோடு அனைவரும் செல்லும் பீச்சிற்கு நாங்கள் சென்றோம். கூட்டம் கும்மியடித்தது. காரை பார்க்கிங் செய்யக்கூட இடமில்லை. நீண்ட தூரத்தில் பார்க்கிங் விட்டுவிட்டுத்தான் நடந்தே வந்தோம். கடலை காணப்போகிறோம் என்றத் துள்ளலில் தூரமாக நடந்தது போரே அடிக்கவில்லை. பாதுகாப்பாக குழந்தைகளை கடலில் குளிக்கவிட்டோம்.  கூச்சலிட்டு சந்தோஷத்தில் அலையோடு விளையாடினார்கள். நானே  ஒரு சின்னக்குழந்தையாக மாறிவிட்டேன். “நீங்கள் என்னை காதலிக்கும்போது எப்படி கலகலப்பாக இருந்தீர்களோ, இப்போது அப்படித்தான் பார்க்க முடிகிறது” என்றார், என் மனைவி லதிஃபா.

பீச்சில் குதூகலித்துவந்த மகிழ்ச்சியில் ஹதியா, அயான்

பீச்சில் யாரைக்கண்டாலும் சிரிப்பது:பேசுவது என்று இருந்தோம். சந்தோஷத்தில் யாரும் சமூக விலகலை கடைபிடிக்கவில்லை. குழந்தைகள் வீட்டில் இருந்த விளையாட்டு சாமான்களை கொண்டுவந்து பீச்சில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். முன்பெல்லாம் இதுவேண்டும்: அதுவேண்டும் என்று கேட்டு அடம்பிடிக்கும் குழந்தைகள் பீச்சிலிருந்து எங்கு நம்மை வீட்டிற்கு அழைத்துச்சென்று விடுவார்களோ என்று தண்ணீர்கூட கேட்கவில்லை. அவர்களின் சந்தோஷத்தை வார்த்தைகளில் விவரிக்கவே முடியாது. தினமும் வெளியில் அழைத்துச்செல்ல சொல்கிறார்கள். எங்களுக்கு இப்போது பண்டிகைப்போல்தான் இருந்தது” என்று என்று ஏக்கம்கொள்ள வைக்கிறார்

நம்மூரிலோ சென்னை மெரீனா பீச்சை எப்போது திறப்பார்கள் என்று ஏக்கத்தோடு காத்திருக்கிறார்கள் மக்கள்..