சுற்றுச்சூழல்

ஜவளகிரியில் 3 குழுக்களாக முகாமிட்டுள்ள 70 யானைகள்: தீவிர கண்காணிப்பில் வனத்துறையினர்

ஜவளகிரியில் 3 குழுக்களாக முகாமிட்டுள்ள 70 யானைகள்: தீவிர கண்காணிப்பில் வனத்துறையினர்

kaleelrahman

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த ஜவளகிரி வனச்சரகத்தில், மூன்று குழுக்களாக, 70க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன.

கர்நாடகா மாநிலம், காவிரி வனவிலங்கு சரணாலயத்தில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் தமிழக வனப்பகுதிக்கு யானைகள் இடம் பெயர்கின்றன. இந்நிலையில், இந்த ஆண்டு ஒரு மாதத்திற்கு முன்பே யானைகள் இடம் பெயர்ந்தன. தமிழக எல்லையான ஜவளகிரி வனச்சரகத்தில், தற்போது, 70-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. குறிப்பாக, பனைமேற்கு வனப்பகுதியான சாவரபத்தா, முதிகேரிதொட்டி, படிகலாளம் ஆகிய காப்புக்காடுகளில் மூன்று குழுக்களாக உள்ளன.

அவை, எப்போது வேண்டுமானாலும் தேன்கனிக்கோட்டை வனச்சரகத்துக்கு இடம் பெயர வாய்ப்புள்ளது. அதை தடுக்க, ஜவளகிரி வனச்சரகர் சுகுமார் மற்றும் 20 பேர் அடங்கிய குழுவினர், யானைகளை கண்காணித்து, தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு இடம் பெயராமல் தடுத்து வருகின்றனர். அங்கு யானைகள் இடம் பெயர்ந்து விட்டால், அதன் பின் ஓசூர், ராயக்கோட்டை வனச்சரக பகுதிக்கு பல்வேறு குழுக்களாக பிரிந்து சென்று விடும்.

அப்படி சென்றால், ராகி, நெல் உள்ளிட்ட பல்வேறு விவசாய பயிர்கள் அதிகளவில் நாசமாகி விடும். உயிர்பலி ஏற்படவும் அதிக வாய்ப்புள்ளது. அதனால், வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். ஜவளகிரி வனச்சரகத்தை ஒட்டிய கிராம மக்கள், வனப்பகுதிக்குள் செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.