இந்தியாவில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 58% குழந்தைகள் இரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய குடும்ப சுகாதார ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.
இரத்தசோகை, பன்முகத்தன்மை கொண்ட பிரச்சனையாகும். போதுமான அளவில் இரும்புச்சத்துள்ள உணவைச் சாப்பிடாதது, பயறு வகைகள், கீரைகள், பழங்கள் ஆகியவை அடங்கிய உணவை உட்கொள்ளாதது போன்ற பல காரணங்களால் இரத்தசோகை ஏற்படுகிறது.
நாட்டின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறையின் கணக்கெடுப்பின்படி, 5 வயதுக்குதப்பட்ட குழந்தைகளில் 58% குழந்தைகள் ரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டு, ஹீமோகுளோபின் இல்லாமல், பல்வேறு தொற்று நோய்களால் பாதிக்கப்படுவதுடன், குழந்தைகளின் மூளை வளர்ச்சியையும் அது பாதிப்பதாக ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2015-16 ஆம் ஆண்டில் சுமார், 6 லட்சம் குடும்பங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில் ஒரே வயதில் உள்ள 38% குழந்தைகள் வளர்ச்சி குன்றியும், 21% குழந்தைகள் பிற குறைகளுடனும், 30% எடை குறைந்தும் இருப்பது தெரியவந்துள்ளது.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கடந்த 2015 ஆம் ஆண்டில் இந்தியாவில் 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை 12.4 கோடி. இதில் 7.2 கோடி குழந்தைகள் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டும், 5 கோடி குழந்தைகள் வளர்ச்சி குன்றியும், 2.6 கோடி குழந்தைகள் பிற குறைகளுடனும், 4.4 கோடி எடை குறைவாகவும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
குழந்தைகள் மட்டுமின்றி, கர்ப்பிணிப் பெண்கள் தான் அதிகமாக இரத்த சோகையால் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதில் சுமார் 15-49 வயதுக்குட்பட்டவர்கள் மொத்தமாக 53% பெண்களும், 23% ஆண்ளும் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.