திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் காய்ச்சல் காரணமாக 139 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனையில் காய்ச்சல்கள் காரணமாக ஏராளமானோர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில், காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று வந்தவர்களில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவ மனைகளுக்கு வருபவர்களுக்கும் உரிய சிகிச்சை அளிக்க அந்தந்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் திருவாரூர், நாகை மற்றும் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த 139 பேர் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் செல்வராணி என்பவருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் “திருவாரூர் மாவட்டத்தில் டெங்கு நோய் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது. இதுவரை டெங்கு என அனுமதிக்கப்பட்ட 26 க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் .தற்போது ஒரு நோயாளிக்கு மட்டும் பன்றி காய்ச்சல் நோய் இருப்பது உறுதி படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது."
"மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை தீவிர மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும் என மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.இதனிடையே மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ், பல்வேறு பகுதிகளுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்து டெங்கு கொசுக்களை உற்பத்தி செய்யும் வகையில் சுகாதாரமற்ற முறையில் சுற்றுப்புறத்தை வைத்திருப்போருக்கு அபராதம் விதித்து டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டார்.