Ravi Bopara / Sussex Twitter
Cricket

49 பந்துகளில் 144 ரன்கள் அடித்த இங். வீரர்! ஒரு டி20 இன்னிங்ஸில் 324 ரன்கள் குவித்து சாதனை!

லண்டனில் நடைபெற்ற இரண்டாவது லெவன் டி20 சாம்பியன்ஷிப் போட்டியின் போது இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் ரவி போபாரா, தன்னுடைய வாழ்நாள் ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

Rishan Vengai

டி20 கிரிக்கெட்டில் எப்போதும் ஆச்சரியப்படக்கூடிய போட்டிகள் வந்துகொண்டே இருக்கும். அதுதான் அந்த வடிவத்தின் விரும்பக்கூடிய ஒரு சிறப்பம்சமாகும். இந்த வீரர் தான் அடிப்பார், இந்த பவுலர் தான் சிறப்பாக வீசுவார் என்னும் வரையறையை எல்லாம் உடைத்துவிட்டு, எந்த வீரர் வேண்டுமானாலும் உங்களை சர்ப்ரைஸ் செய்யமுடியும் என்பதை வரையறுத்தது டி20 கிரிக்கெட் தான். இந்நிலையில், மீண்டும் ஒரு அசத்தலான ஒரு போட்டியை கிரிக்கெட் ரசிகர்களுக்கு தந்துள்ளது, டி20 கிரிக்கெட்.

14 பவுண்டரிகள், 12 சிக்சர்கள், 39 பந்துகளில் 144 ரன்கள்!

நேற்று மே 23 அன்று, லண்டனில் உள்ள ரிச்மண்ட் கிரிக்கெட் கிளப்பில் இரண்டாவது லெவன் டி20 சாம்பியன்ஷிப் தொடருக்கான பயிற்சி போட்டி நடைபெற்றது. அந்த போட்டியில் சசெக்ஸ் மற்றும் மிடில்செக்ஸ் அணிகள் மோதின. சசெக்ஸ் அணிக்கு இங்கிலாந்து அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ரவி போபாரா கேப்டனாக தலைமை தாங்கினார்.

Ravi Bopara / Sussex

முதலில் தொடங்கப்பட்ட போட்டியில் சசெக்ஸ் அணி பேட்டிங் செய்தது. அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்திய ஓபனர்கள், 4 ஓவரில் 67 ரன்களை குவித்து அற்புதமான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். தொடக்க வீரர்கள் ஸ்டிரைக் ரேட்டில் 150+ பேட்டிங்கை வெளிப்படுத்திய போது, 5 ஓவரில் களமிறங்கிய 38 வயதான ரவி போபாரா, தன்னுடைய வாழ்நாள் சிறந்த பேட்டிங்கை வெளிக்கொண்டுவந்தார். 250+ ஸ்டிரைக் ரேட்டில் ஒரு யுகத்திற்கான பேட்டிங்கை ஆடிய அவர், ஒரே ஓவரில் 38 ரன்களை அடித்து மிரட்டி விட்டார்.

டி20 வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அடிக்கப்பட்ட 300+ டோட்டல்!

திரும்பிய பக்கமெல்லாம் சிக்சர்களாக பறக்கவிட்டுக் கொண்டிருந்த போபாராவுக்கு எதிராக, எப்படி பந்து வீசுவது என்றே தெரியாமல் குழம்பி போயினர் மிடில்செக்ஸ் பந்துவீச்சாளர்கள். 16 ஓவர்களிலேயே 263 ரன்களை எட்டிய நிலையில், மீதமுள்ள 4 ஓவர்களில் 61 ரன்னை எடுத்துவந்தது சசெக்ஸ் அணி.

14 பவுண்டரிகள், 12 சிக்சர்கள் என வானவேடிக்கை காட்டிய போபாரா, 39 பந்துகளில் 144 ரன்களை குவித்து அசத்தினார். அதுமட்டுமல்லாமல் போபாராவின் இந்த மிரட்டல் அடி காரணமாக, டி20 வரலாற்றில் 300க்கும் அதிகமான ரன்களை அடித்து, 324 ரன்களை குவித்தது சசெக்ஸ் அணி.

ஒரு ஓவருக்கு 16+ ரன்கள் தேவை! பந்துவீச்சில் கலக்கிய போபாரா!

போட்டியின் தொடக்கத்திலேயே ஒரு ஓவருக்கு அடிக்கப்பட வேண்டிய சராசரி ரன்கள் 16க்கும் அதிகமாக இருந்தது. இந்நிலையில் பேட்டிங்கில் கலக்கிய மட்டுமில்லாமல், பந்துவீச்சிலும் கலக்கிய போபாரா, 32 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டில் கலக்கிய இங்கிலாந்து ஆல்ரவுண்டர், ஒரு அற்புதத்தையே நிகழ்த்தி காட்டிவிட்டார்.

Ravi Bopara / Sussex

சசெக்ஸ் அணியின் இந்த தாக்குதலுக்கு தாக்குபிடிக்கமுடியாத மிடில்செக்ஸ் அணி, 130 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வியை சந்தித்தது. 194 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது சசெக்ஸ் அணி. இந்நிலையில், போபாராவின் இந்த அதிரடியான பேட்டிங் மற்றும் அற்புதமான பவுலிங் இரண்டையும் நெட்டிசன்கள் பாராட்டிவருகின்றனர்.