தமிழகத்தில் கொரோனா காரணமாக தொடர்ந்து அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலை இழப்புகளால் பாதிக்கப்பட்டு சொந்த ஊர் சென்றவர்கள் மெல்ல நகரங்களுக்குத் திரும்பி வருகின்றனர். பொருளாதாரப் பிரச்சனைகளில் சிக்கியுள்ள பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டிவருகின்றனர்.
தற்போது நடப்பு ஆண்டுக்கான கல்விக்கட்டணம் செலுத்தாத நிலையில், தனியார் பள்ளிகள் மாற்றுச்சான்றிதழை வழங்க மறுத்து வருகின்றன. ஆனாலும் அரசுப் பள்ளிகளில் பெற்றோா் தங்களது குழந்தைகளைச் சோ்க்கலாம் என பள்ளிக் கல்வித்துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் அரசு, உதவி பெறும் பள்ளிகளில் கடந்த ஆகஸ்ட் 17 ம் தேதி முதல் 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளில் மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 29ம் தேதி வரை ஆறு லட்சத்துக்கும் அதிகமான மாணவா்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கல்வி ஆண்டுக்கான முழுமையான கட்டணத்தைச் செலுத்தினால் மட்டுமே மாணவா்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்கப்படும் என பெற்றோா்களிடம் தனியார் பள்ளிகள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அரசுப் பள்ளிகளில் குழந்தைகளைச் சோ்க்க பெற்றோா் அவதிப்படுவதை கவனத்தில் கொண்ட பள்ளிக்கல்வித்துறை, மாற்றுச் சான்றிதழ் இல்லாவிட்டாலும் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்க நடவடிக்கை எடுத்துள்ளது.
அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் சோ்க்க விரும்பும் குழந்தைகளுக்கு மாற்றுச் சான்றிதழ் தேவையில்லை. அதேபோல 6, 7, 8-ஆம் வகுப்புகளில் சோ்க்க, ஏற்கெனவே படித்த பள்ளி பற்றிய தகவல்களை தெரிவித்தால் போதும். மாணவா்களின் ‘எமிஸ்’ அடையாள அட்டை எண்ணை அடிப்படையாகக் கொண்டு அரசுப் பள்ளிகளில் உடனடியாக சோ்க்கை வழங்கப்படும். இந்தப் பணிகளை அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள் மேற்கொள்வார்கள்.
எனவே மாற்றுச் சான்றிதழ் பெற முடியாத பெற்றோா் கவலை அடைய வேண்டியதில்லை. அரசுப் பள்ளிகளில் செப்டம்பர் 30ம் தேதி வரை மாணவா் சோ்க்கை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.