கல்வி

50,000 மாணவர்கள் தேர்வு எழுதலையா? எப்படி கோட்டைவிட்டது அரசு? - பின்னணியில் பகீர் தகவல்கள்!

50,000 மாணவர்கள் தேர்வு எழுதலையா? எப்படி கோட்டைவிட்டது அரசு? - பின்னணியில் பகீர் தகவல்கள்!

நிவேதா ஜெகராஜா

தமிழ்நாட்டில் +2 பொதுத்தேர்வு நடந்துவரும் நிலையில், மொழித்தாள்களையே 50,000 மாணவர்கள் எழுதாமல் தவிர்த்திருந்தனர். இதன் பின்னணி என்ன என்பதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், கல்வியாளர் நெடுஞ்செழியன் என பலரும் புதிய தலைமுறைக்கு பேட்டியளித்திருந்தனர். அந்த விவரங்களை, இங்கு காணலாம்.

தேர்வு தொடங்கிய முதல்நாளே அதிர்ச்சி!

தமிழ்நாட்டில் தற்போது பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது. தேர்வு தொடங்கிய முதல் நாளே மிகப்பெரிய அதிர்ச்சியாக தகவல் வெளிவந்தது. அதாவது, சுமார் 50,000 மாணவர்கள் தினசரி தேர்வு எழுதாமல் ஆப்சென்ட் ஆகின்றனர் என்ற செய்தி தமிழகத்தையே அதிர செய்தது. ஏன்? எதனால்? எப்படி? மாணவர்கள் தேர்வு எழுதாமல் போகிறார்கள் என்ற கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றது.

”சிக்கல் பாடத்தில் இல்லை. வருகையிலேயே..” - கல்வியாளர் நெடுஞ்செழியன்

கல்வியாளர் நெடுஞ்செழியன் பேசுகையில், “மொழித்தாள் எழுதாத மாணவர்கள் பிற பரிட்சைகளும் எழுதாமல் போகும் வாய்ப்புள்ளது. இவர்கள் திடீரென பரிட்சைக்கு விடுப்பு எடுத்தவர்களாக இருக்க வாய்ப்பில்லை. வகுப்பையே புறக்கணித்திருப்பார்கள். அப்போதே கண்காணித்து வந்திருக்க வேண்டும். மாணவர் – ஆசிரியர் இடையேயான இடைவெளி அதிகரிக்கும் போது, இப்படியான சிக்கல்கள் ஏற்படலாம். மொழித்தேர்வென்பது, பிற பாடங்களைகாட்டிலும் ரொம்பவும் எளிமையானது. எப்படியும் பாஸ் பண்ணிவிடலாம் என மாணவர்களுக்கு நம்பிக்கையை விதைக்கக்கூடியது மொழித்தேர்வுகள்தான். அப்படியானவற்றையே அவர்கள் புறக்கணித்திருக்கிறார்கள் எனில், சிக்கல் பாடத்தில் இல்லை. வருகையிலேயே இருந்திருக்கிறது.

இடைநிற்றலும் குழந்தை தொழிலாளர் சிக்கலும்!

மாணவர்கள் இடைநிற்றலை நாம் கவனத்தில் எடுத்து ஆலோசிக்க வேண்டிய நேரம் இது. பள்ளிப்பருவத்தில் குழந்தை தொழிலாளர்களாக மாணவர்கள் அதிகம் உள்ளனர். நகர்ப்புறங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் நகர்ப்புறங்களில், காலையில் பள்ளிக்கு சென்றுவிட்டு மாலையில்தான் வேலைக்கு செல்கின்றனர். கிராமங்களில் நிலைமை அப்படி இல்லை. அங்கு முழுமையாக படிப்பைவிட்டுவிட்டு, வேலைக்கு செல்கின்றனர். அங்குதான் சிக்கல் தீவிரமாகிறது. அவர்களை அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் கண்டறிந்து, அப்போதே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சமூகத்தை சமன்படுத்த வேண்டிய கடமை நமக்கு உள்ளது. இங்கு நிலவும் ஏற்றத்தாழ்வுகளால் தான் இப்படியான சிக்கல்கள் ஏற்படுகின்றன. அதை சரிசெய்தால்தான், நம்மால் மாணவர்களை கல்வியை நோக்கி கொண்டுவரமுடியும்” என்றார்.

உளவியல் ஆலோசனை தேவை - கல்வியாளர் ஜெயப்பிரகாஷ்

கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறுகையில், “தமிழகத்தில் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்க வேண்டும். பொருளாதாரச் சூழல், மாணவர்களிடையே குறைந்த கற்றல் திறன் உள்ளிட்டவை முக்கியக் காரணிகளாக இருக்கிறது” என்றார்.

இதுவெல்லாம் காரணமாக இருக்கலாம் - அமைச்சர் அன்பில் மகேஷ் கொடுத்த விளக்கம்

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில், “பெற்றோர்களுடன் வேலைக்கு செல்வது, இளமை திருமணம், தேர்வு பயம் போன்ற பல்வேறு காரணங்கள் இருக்கலாம் கருதுகிறோம். வருங்காலங்களில் இந்த எண்ணிக்கையை குறைக்க முயற்சி செய்வோம். தேர்வெழுதாத மாணவர்களின் பெற்றோருக்கும் உளவியல் ஆலோசனைகள் வழங்கப்படும் என்றும், மாணவர்களை தேர்வெழுத பெற்றோர் அழைத்துச் செல்ல வேண்டும்” என்றார்.

ஆசிரியர்கள் சொல்லும் பகீர் தகவல்

ஆசிரியர்கள் தரப்பில் நாம் விசாரித்தபோது, “பள்ளிகளுக்கு தொடர்ச்சியாக மூன்று, நான்கு மாதம் வரவில்லை என்றாலே அந்த மாணவர்களின் பெயர், வருகை பதிவேட்டில் இருந்து நீக்கப்படுவது வழக்கம். சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து விசாரணை நடத்தி, டிசி வழங்குவதற்கும் கடந்த காலங்களில் நடவடிக்கை எடுக்கப்படுவது வழக்கம்.

ஆனால் சமீப காலங்களாக, ஒரு மாணவர் எட்டு மாதங்கள் பள்ளிகளுக்கு வரவில்லை என்றாலும் கூட , அவரது பெயர் வருகை பதிவேட்டிலிருந்து நீக்கம் செய்வதை இல்லை. கல்வித்துறையின் புள்ளி விவரங்களை கண்காணிக்க கூடிய எமிஸ் என்ற இணையதளத்தில் இருந்தும் மாணவர் பெயர் நீக்கப்படுவது இல்லை” எனவும் குற்றம்சாட்டுகின்றனர்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு வரக்கூடிய மாணவர்கள் அனைவரும் அப்படியே பதினோராம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதுகிறார்கள் என்று காட்ட வேண்டும் என்பதற்காகவும், 11 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதக்கூடிய மாணவர்கள் அனைவரும் பனிரெண்டாம் வகுப்புக்கு செல்கிறார்கள் என்று காட்டுவதற்காகவும் இதுபோன்ற தவறான செயல்கள் கல்வித் துறையில் அரங்கேற்றப்படுவதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். 

இதன் ஒரு படி மேலாக, பள்ளிகளுக்கு வராத மாணவர்களால் பள்ளிக்கல்வித்துறைக்கு அதிக அளவில் பல நிதி இழப்புகளும், முறைகேடுகளும்  நடக்கிறது” என்ற அதிர்ச்சி தகவலை தெரிவிக்கின்றனர்.