கல்வி

வன்னியர் இடஒதுக்கீட்டின்படி தயாரான பட்டியலை ரத்து செய்ய கோரிக்கை... TRB நிலைப்பாடு என்ன?

வன்னியர் இடஒதுக்கீட்டின்படி தயாரான பட்டியலை ரத்து செய்ய கோரிக்கை... TRB நிலைப்பாடு என்ன?

webteam

வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டின் அடிப்படையில் (TRB - PG Assistant) ஆசிரியர் தகுதி தேர்வில் (பி.ஜி அசிஸ்டன்ட்டாக) வெளியிடப்பட்ட தேர்வு பட்டியலை ரத்து செய்ய கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “இதுதொடர்பாக ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் நடவடிக்கைகளை தொடரலாம். ஆனால் இறுதி முடிவு நீதிமன்ற தீர்ப்பிற்கு உட்பட்டது” என்று நீதிமன்றம் தெரிவித்தது

கரூர் மாவட்டத்தை சேர்ந்த குப்புசாமி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "நான் MBC வகுப்பைச் சார்ந்தவன். நான் கணித பிரிவில் பி.எஸ்.சி, பி.எட், எம்.எஸ்.சி, எம்.எட் படிப்பு முடித்துள்ளேன். 2021 ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான பி.ஜி.அசிஸ்டன்ட் (TRB - PG Assistant) அறிவிப்பு வெளியானது. இதில் எம்.பி.சி (MBC) வகுப்பு 3 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை MBC, MBC (V), MBC/DNC- ஆகியவை.

இந்நிலையில் நான் ஆசிரியர் தகுதி தேர்வு (TRB) எழுதி 150 மதிப்பெண்ணுக்கு 87.17 மதிப்பெண் பெற்றேன். ஆசிரியர் தகுதி தேர்வு பி.ஜி. அசிஸ்டன்ட் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் 28.08.2022 வெளியிடப்பட்டுள்ளது. இதில், எம்.பி.சி வன்னியர் (MBC (V)) வகுப்பினை சார்ந்த நபர் 150 மதிப்பெண்களுக்கு 75.1 மதிப்பெண் பெற்றுள்ள நிலையில், அவரது பெயர் தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் சரி பார்ப்பு பட்டியலில் உள்ளது. இது சட்ட விரோதமானது.

எம்.பி.சி வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டினை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. எனவே, வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டின் கீழ் வெளியிடப்பட்ட பி.ஜி.அசிஸ்டன்ட்டுகளுக்கான தேர்வு பட்டியலை ரத்து செய்வதோடு, தனி குழுவை உருவாக்கி, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான பட்டியலை ஆய்வு செய்து புதிய பட்டியல் வெளியிட உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், “இந்த வழக்கில் ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் நடவடிக்கைகளை தொடரலாம். ஆனால் இறுதி முடிவு நீதிமன்ற தீர்ப்பிற்கு உட்பட்டது. மேலும் தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான (BC, MBC/DNC) செயலர், ஆசிரியர் தகுதி தேர்வு வாரிய தலைவர் வழக்கு குறித்து பதிலளிக்க உத்தரவிடப்படுகிறது” எனக்கூறி வழக்கு விசாரணை செப்டம்பர் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.