சிறார் எழுத்தாளர் விழியன் PT
கல்வி

“இந்த மெனக்கெடல் இல்லாததுதான் சிறார் இலக்கியத்தின் பின்னடைவு” - சிறார் எழுத்தாளர் விழியன் பேட்டி

வளம் நிறைந்த தமிழ் இலக்கியத்தில் இளையோர் இலக்கியத்திற்கு என 100 புத்தகங்கள் கூட இல்லை என்பது வருத்தத்திற்குரியது - சிறார் எழுத்தாளர் விழியன்

Rishan Vengai

சிறார் இலக்கியத்தின் அப்டேட்டட் வெர்சன் என இவரை சொல்லிவிடலாம். விழியன் எனும் புனைபெயரோடு சிறார் இலக்கியங்களை எழுதிவருபவர் உமாநாத் செல்வன். சிறார்களுக்கான இலக்கியத்தில் இவர் கொண்டுவந்திருக்கும் புதுமையை, இவருடைய புத்தகங்களுக்கு வைத்திருக்கும் பெயர்களை வைத்தே தெரிந்துகொள்ளலாம்.

சிறார் எழுத்தாளர் விழியன்

"பென்சில்களின் அட்டகாசம், வளையல்கள் அடித்த லூட்டி, அதென்ன பேரு கியாங்கி டுயாங்கி, டாலும் ழீயும், ஜூப்பிடருக்குச் சென்ற இந்திரன், மாகடிகாரம், அந்தரத்தில் நடந்த அபூர்வக் கதை, கிச்சா பச்சா, மலைப்பூ, யாச்சியின் குமிழி ஆசை, காராபூந்தி சிறார் கதைகள்" என வளரும் குழைந்தகள், வளர்ந்த குழந்தைகள், இளையோர்கள் என 3 வகையான சிறார்களுக்கும் இலக்கியத்தில் இவர் ஏற்படுத்திய அப்டேசன் என்பது பலதரப்பாலும் பாராட்டப்பட்டது. இவருடைய படைப்புகள் சிறந்த சிறார் இலக்கியத்திற்கான பல விருதுகளை வாங்கியுள்ளன.

இந்த மெனக்கெடல் தான் சிறார் இலக்கியத்தில் இல்லாமல் போனது!

புதியதலைமுறையுடன் இலக்கியம் என்ற நிகழ்ச்சியில் பேசியிருக்கும் எழுத்தாளர் விழியன், சிறார் இலக்கியத்தில் நாம் இன்னும் 100 வருடங்கள் பின் தங்கியிருக்கிறோம் என கூறினார்.

அவர் அளித்திருக்கும் பேட்டியில், “சிறார் இலக்கியங்கள் வளர்ந்திருக்கும் ஐரோப்பாவில் எழுத்தாளர்கள், வெளியீட்டாளர்கள் மற்றும் நூலக செயல்பாட்டாளர்கள் என மூவருக்கும் இருக்கும் ஒற்றுமை என்பது நம்பவே முடியாதது. அவர்கள் புத்தகங்களை படிக்கும் சிறார்கள் எந்த புத்தகம் வாசிக்கும் போதும், எந்தளவு வாசிக்கிறார்கள், எவ்வளவு நேரம் வாசிக்கிறார்கள், எந்த இடத்திலிருந்து மாற்று புத்தகத்திற்கு போகிறார்கள் என்று கண்காணித்து வெளியீட்டாளர்கள் மற்றும் எழுத்தாளர்களிடம் தெரிவிக்கிறார்கள். மேலும் எந்த புத்தகங்கள் வரவேற்பை பெருகின்றன, எவை நன்றாக இருக்கின்றன என வாசித்தும், ஆய்வு செய்தும் தனித்தனியாக தெரிவிக்கின்றனர். இந்த அப்டேசன் நம்மிடம் வருவதற்கு இன்னும் 100 ஆண்டுகள் கூட ஆகலாம், ஆகாமலும் போகலாம்” என தெரிவித்துள்ளார்.

சிறார் எழுத்தாளர் விழியன்

மேலும் சிறார்களை இலக்கியத்தின் பக்கமும், அடுத்த நகர்தலுக்கும் இழுக்க அதிக மெனக்கெடல் செய்யவேண்டும் என கூறிய அவர், “சிறார் இலக்கியம் என நாம் ஒரு வரியில் சொல்லிவிடுகிறோம். 3 விதமான சிறார்களுக்கு வெவ்வேறு விதமான சொல்லாடல், வெவ்வேறு விதமான உலகம், வெவ்வேறு விதமான நடை என மெனக்கெடல் செய்ய வேண்டும். 8-9 வயதுடையவர்கள் பென்சில் பேசும், வளையல் கதை சொல்லும் என்பது போலான பேண்டசி கதைகளை விரும்புவார்கள், இது மழலை இலக்கியம். அதே 9-10 வயதுக்கு மேலானவர்கள் ஃபேண்டசியில் இருந்து ரோட்டில் இது நடந்தது, காட்டுக்குள் அந்த விசயம் நடந்தது என்ற ஃபேக்ட் விசயங்களுக்கு செல்கிறார்கள், இது சிறுவர்கள் இலக்கியம். 14 வயதிற்கு மேலானவர்களுக்கு என எழுதும் போது தான் நிறைய மெனக்கெடல் செய்ய வேண்டியாதாக இருக்கும்.

சிறார் எழுத்தாளர் விழியன்

இதுவரை தமிழ் சிறார் இலக்கியத்தில் மழலை, சிறுவர் இலக்கியம் என 2 வகைகள் தான் இருந்தது. இளையோர் இலக்கியம் வந்ததே சில ஆண்டுகளுக்கு முன்பு தான். இலக்கியம் நிறைந்த தமிழில் இளையோர்களுக்கான புத்தகங்கள் என்பது 100 கூட இல்லை. இவர்களுக்கு எழுதும் போது சொல்லாடலும், அவர்களுடைய யோசிக்கும் திறனையும், பேசிக்கொள்ளும் நடையையும் தெரிந்து கொண்டு அதற்கேற்றார் போல் எழுதவேண்டும். இந்த மெனக்கெடல் தான் சிறார் இலக்கியத்தில் இல்லாமல் இருக்கிறது” என கூறியுள்ளார். முழு வீடியோவையும் மேலே கொடுத்திருக்கும் லிங்க் மூலம் பார்க்கலாம்.