கல்வி

பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு வேலூர் ஆட்சியர் எச்சரிக்கை

நிவேதா ஜெகராஜா

`பள்ளி வகுப்பறைக்குள் மாணவர்கள் செல்போன் எடுத்து வரக்கூடாது’ என வேலூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

வேலூர் தொரப்பாடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி 12-ம் வகுப்பு மாணவர்கள், பள்ளியில் பிரிவு உபச்சார விழா நடத்தவில்லை என்பதால் வகுப்பறையில் உள்ள இரும்பு மேசைகளை உடைத்திருந்தனர். இச்சம்பவத்தை செல்போனில் சக மாணவர்களே பதிவு செய்திருந்த நிலையில், அதுகுறித்த வீடியோ காட்சிகள் நேற்று முழுக்க இணையத்தில் வேகமாக பரவியது. இந்நிலையில் பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்போன் கொண்டு வர தடை விதித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் வாய்மொழி உத்தரவாக மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

உத்தரவை மீறி வகுப்பறைக்குள் செல்போன்களை மறைத்து எடுத்து வரும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே மேஜை உடைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட 10 மாணவர்களை தற்காலிக இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.