மாணவர்களுக்கு படிக்கும் ஆர்வத்தை தூண்டும் வகையில், திருப்பூரின் தெங்குமரஹாடா அரசுப் பள்ளியை ஓவியங்களால் வண்ணமயமாக்கியுள்ளனர் அப்பகுதியை சேர்ந்த வேறொரு அரசுப் பள்ளியின் ஆசிரியர்கள். இதற்காக அந்த ஆசிரியர்கள் பண உதவியேதும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அவர்களுக்கு பல தரப்பிலுமிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
திருப்பூர் பட்டாம்பூச்சி தொண்டு நிறுவனம் மற்றும் திருப்பூர் பாண்டியன் நகர் பள்ளியில் இடைநிலை ஆசிரியர்களாக பணிபுரியும் ஆசிரியர்கள் கார்த்திகேயன், ராஜூகிருஷ்ணன், ரவிசந்திரன், ஹரி கிருஷ்ணன் ஆகியோர் இணைந்து மலைக்கிராமப் பள்ளிகளை வண்ணமயமாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில், தெங்குரமஹாடா அரசு பள்ளியை வர்ணம் தீட்டியுள்ளனர். இதுமட்டும் விஷேஷமுற, ஒரு காரணம் உள்ளது. இப்பள்ளியை வண்ணமயாக்க வேண்டி, இவர்கள் 30 கிமீ அடர்ந்த காட்டுப்பகுதியில் பயணித்திருக்கிறார்கள். இப்படி சுமார் 50 பள்ளிகளில் வர்ணம் பூசி சேவை செய்துள்ளனர்.
தொடர்புடைய செய்தி: மதுரை: விமானம், ரயில் போன்று வகுப்பறைகளை வடிவமைத்துள்ள அரசுப்பள்ளி தலைமையாசிரியர்
தெங்குரமஹாடா அரசு பள்ளியை பொறுத்தவரையில் சுவரில் தேசத்தலைவர்களின் ஓவியங்கள், இயற்கை காட்சிகளுடன் அமைந்த விலங்குகள், நீர்வீழ்ச்சி, வகுப்பினுள் காய்கறிகள், பழங்கள், பறவைகள், வகுப்பில் உள்ளே எழுத்துகள், வடிவங்கள் போன்ற மாணவர்கள் எளிதில் பார்த்து கற்கும் விதமான பாடம் சார்ந்த படங்கள் வரையப்பட்டது. நுரையீரல், சிறுநீரகம் ஆகியவை எளிதில் பார்த்து தெரியும்படி படங்கள் வரையப்பட்டுள்ளது. தினமும் படித்து ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில், வகுப்பறை முழுவதும் ஆங்காங்கே ஆங்கில சொற்கள் எழுதப்பட்டுள்ளது.
இதற்காக செல்விடப்பட்ட ரூ.50 ஆயிரத்தை பட்டாம்பூச்சி நிறுவனம் ஏற்றுக்கொண்டிருக்கிறது. இப்படங்களை பார்த்து வளரும் மாணவர்களுக்கு, தாமும் வரையும் மனப்பான்மையும், பள்ளிக்கு விடுப்பு எடுக்காமல் வரும் எண்ணமும் உருவாகும் என இந்த ஆசிரியர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றார்கள். மாணவர்கள் மத்தியில் மன தையரிம் உருவாகவும், அவர்களுக்கு கல்வியில் ஊக்கம் கிடைக்கவுமே இது போன்ற சேவையை தொடர்வதாக பட்டாம்பூச்சி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ் தெரிவித்தார். பள்ளியின் விடுமுறை நாட்களில் அரசு பள்ளி ஆசிரியர்களின் இந்த சேவையை செய்துவருவது பல தரப்பிலிருந்தும் பாராட்டை பெற்றுவருகிறது.
- டி.சாம்ராஜ்