கல்வி

15,000 ஆசிரியப்பணிகள்... TRB 2023 தேர்வு தேதி விவரங்களோடு வெளியான மாஸ் அப்டேட்!

15,000 ஆசிரியப்பணிகள்... TRB 2023 தேர்வு தேதி விவரங்களோடு வெளியான மாஸ் அப்டேட்!

webteam

தமிழகத்தில் கல்லூரி மற்றும் பள்ளிகளில் காலியாக உள்ள 15,000 உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்கள் அடுத்த ஆண்டு நிரப்பப்பட உள்ளன. இதற்கான 2023 ஆம் ஆண்டிற்கான செயல் திட்டத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. இதன்படி தமிழகத்தில் கல்லூரி மற்றும் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் குறித்தும், இதற்காக தேர்வு அறிவிப்பு வெளியாகும் தேதி மற்றும் தேர்வு நடத்தப்படும் தேதி குறித்த ஓராண்டு செயல் திட்டத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், “தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் 15,149 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த செயல் திட்டத்தின்படி தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4,000 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு ஜனவரியில் வெளியாகிறது. இதற்கான தேர்வு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது.

23 வட்டார கல்வி அலுவலர் காலியிடங்களுக்கு பிப்ரவரி மாதம் அறிவிப்பு வெளியாகி, மே மாதம் தேர்வு நடத்தப்படும். 6,553 இடைநிலை ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு மார்ச் மாதம் வெளியாகும். மே மாதம் இதற்கான தேர்வு நடத்தப்படும். 3,587 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு ஏப்ரல் மாதம் வெளியாகும் என்றும், ஜூன் மாதம் இதற்கான தேர்வு நடத்தப்படும்.

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 493 ஆசிரியர் பணியிடங்களுக்கு மே மாதம் தேர்வு குறித்து அறிவிப்பு வெளியாகும். ஆகஸ்ட் மாதம் தேர்வு நடத்தப்படும். அரசு பொறியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 97 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு குறித்த அறிவிப்பு ஜூன் மாதம் வெளியிடப்படும். செப்டம்பர் மாதம் இதற்கான தேர்வு நடத்தப்படும்.

அரசு சட்டக் கல்லூரிகளில் காலியாக உள்ள 129 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு ஜூலை மாதம் வெளியிடப்பட உள்ளது. அக்டோபர் மாதம் இதற்கான தேர்வு நடத்தப்பட உள்ளது.

பள்ளிகளில் காலியாக உள்ள 267 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் வெளியாகும். நவம்பர் மாதம் தேர்வு நடத்தப்படும். இதேபோன்று தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு குறித்து அறிவிப்பு 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிவிப்பு வெளியாகும். 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இதற்கான தேர்வு நடத்தப்படும். பள்ளி கல்லூரிகளில் காலியாக உள்ள 15,149 ஆசிரியர் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.