கல்வி

திருவாரூர்: இடிந்துவிழும் ஆபத்தில் 50 ஆண்டுகள் பழமையான அம்மையப்பன் அரசு பள்ளி

திருவாரூர்: இடிந்துவிழும் ஆபத்தில் 50 ஆண்டுகள் பழமையான அம்மையப்பன் அரசு பள்ளி

Veeramani

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் அம்மையப்பன் அரசு மேல்நிலைப்பள்ளி அபாயகரமான ஆபத்தில் இருக்கிறது

கடந்த 2003 - 04 காலகட்டத்தில் நபார்டு வங்கி திட்டத்தின் கீழ், தரை தளத்தில் ஆறு அறைகளும் மேல்தளத்தில் ஆறு அறைகளும் கொண்ட பள்ளி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. அதே ஆண்டில் மேல்தளத்தில் 5 அறைகளும், கீழ்தளத்தில் 5  அறைகளும் கொண்ட மற்றொரு பள்ளி கட்டடமும் கட்டப்பட்டுள்ளது.

தற்போது இந்த கட்டடத்தில்  மேலே இருக்கின்ற ஆறு அறைகளும் மற்றும் இன்னொரு கட்டடத்தில் மேலே இருக்கின்ற ஐந்து அறைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு சிதிலமடைந்து உள்ளதால், அங்கு வகுப்புகள் நடத்தப்படவில்லை. மேல்தளத்தில் உள்ள அறைகள் இடிந்து விழும் பட்சத்தில் அவை அனைத்தும் கீழ்த்தளத்தில் படித்து வரும் மாணவர்களை பாதிக்கும்.

இந்தப் பழமை வாய்ந்த பள்ளியில் 900 மாணவ மாணவிகள் பயின்று வருகிறார்கள். அதுமட்டுமின்றி அம்மையப்பன் நடுநிலைப் பள்ளியை சேர்ந்த சுமார் 150 மாணவ மாணவிகள் இங்கு பயின்று வருகிறார்கள். பள்ளி தலைமையாசிரியர் அருளாளன் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் இங்கு பணியாற்றி வருகிறார்கள்.

மேலும், அம்மையப்பன் நடுநிலைப்பள்ளி சாலை விரிவாக்கத்திற்காக எடுக்கப்பட்டதால் தற்காலிகமாக அந்தப் பள்ளியில் உள்ள 6,7,8 ஆம் வகுப்பு மாணவர்களும் இங்கு தான் பயில்கிறார்கள், அந்த பள்ளியை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் இங்கு பணியாற்றி வருகிறார்கள். தற்போது திருவாரூர் மாவட்டத்தில் பெய்த கனமழையில், மழைக்காலங்களில் நீர் கசிந்தும் மற்ற நேரங்களில் காரை பெயர்ந்து விழுந்தும் மாணவர்களை அச்சமடைய வைத்துள்ளன.

இதுகுறித்து  பேசிய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன், ஒட்டுமொத்தமாக அந்த பள்ளியில் உள்ள கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய கட்டிடங்களை கட்டுவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்து வருவதாக தெரிவித்தார்

 ஆகவே, அரசு விரைவாக நடவடிக்கை எடுக்காவிட்டால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டு விடும் என்று பெற்றோர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.