கொரோனா 3-வது அலை அச்சுறுத்தல் காரணமாக நீட் மற்றும் மற்ற நுழைவுத்தேர்வுகளை ஒத்திவைக்கும் திட்டமில்லை என மத்திய சுகாதார இணையமைச்சர் பிரவீன் பாரதி தெரிவித்துள்ளார்.
மக்களவையில் திமுக எம்.பி தமிழச்சி தங்கப்பாண்டியன், விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் ஆகியோர் எழுப்பிய கேள்விக்கு மத்திய சுகாதார இணையமைச்சர் பிரவீன் பாரதி எழுத்துபூர்வமாக பதிலளித்துள்ளார். அதன் முக்கிய அம்சங்கள்:
- நீட் மற்றும் இதர பொது நுழைவுத் தேர்வுகளை தற்காலிகமாக நிறுத்திவைக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசுக்கு இல்லை. நீட் (முதுநிலை மற்றும் நீட் (இளநிலை) 2021 தேர்வுகள் 2021 செப்டம்பர் 11 மற்றும் 12ம் தேதிகளில் நடைபெறவுள்ளன.
- இந்தத் தேர்வுகள், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கோவிட் நெறிமுறைகள், தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி நடத்தப்படும்.
- தேர்வை பாதுகாப்பாக நடத்த தேர்வு எழுதுவோர் மற்றும் நடத்துபவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளன.
- கூட்டம் மற்றும் நீண்ட பயணத்தை தவிர்க்க நாடு முழுவதும் தேர்வு மையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கொவிட் இ-பாஸ்-உடன், நுழைவுச் சீட்டு வழங்கப்படுகின்றன.
- தேர்வு மையங்களுக்குள் விண்ணப்பதாரர்களின் நுழைவு மற்றும் வெளியேற்றம் கட்டுப்படுத்தப்படும். நுழைவு வாயிலில் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்படும். உடல் வெப்பம் அதிகமாக உள்ளவர்களுக்கு, இதற்காக அமைக்கப்படும் தனிமை மையத்தில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.
- விண்ணப்பதாரர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம். அவர்களுக்கு முகக்கவசம், கிருமி நாசினி, முக தடுப்பான் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படும்.
- தேர்வு மையத்துக்கு வெளியே கூட்டத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
- கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்புகளுக்கான நுழைவு தேர்வுகள் நடத்துவதை சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்கள் / மாநிலங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.