கல்வி

வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் முதல்வரிடம் நேரில் மனு!

வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் முதல்வரிடம் நேரில் மனு!

Sinekadhara

ஆசிரியர் தகுதித் தேர்வு வெயிட்டேஜ் முறையால் பணி வாய்ப்பு இழந்தோரின் மனு குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளார் முதல்வர் பழனிசாமி.

இன்று கடலூர் மாவட்டத்தில் இருந்து சிதம்பரம் செல்லும் வழியில் ஆலப்பாக்கம் என்ற இடத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வில் 2013ஆம் ஆண்டு 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்து வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் முதல்வரிடம் மனு அளித்தனர்.

ஆலம்பாக்கம் கிராம மக்கள் சுமார் 50 பேருடன் பாதிக்கப்பட்ட நபர்கள் நின்றபோது தனது காரை நிறுத்திய முதல்வர் அவர்களிடம் என்ன பிரச்னை என விசாரித்தார்.

அந்த மனுவில், கட்டாய மற்றும் இலவச கல்வி உரிமைச் சட்டம் 2009-இன் படி தொடக்க நிலை, நடுநிலை வகுப்புகளுக்கு கற்பித்தல் பணிகளில் ஈடுபடுவோரின் தகுதியை நிர்ணயிக்க ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என 2010-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த தேர்வை முதலில் எதிர்த்த தமிழ அரசு பின்பு 2011ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி ஏற்றுக்கொண்டு அதற்கான அரசாணையை வெளியிட்டது.

அதன்படி, 2012 முதல் தகுதித் தேர்வு நடத்தப்பட்டாலும், 2013இல் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் முறை அமல்படுத்தப்பட்டது. இதில் TET தேர்வில் 60% மதிப்பெண்ணும், பள்ளி, கல்லூரிகளில் மதிப்பெண் 40%-ஆகவும் கணக்கிட்டு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும் 2014இல் 5% தளர்வு அறிவிக்கப்பட்டு, அது 2013-கும் பொருந்தும் எனக் கூறி சான்றிதழ் சரிபார்ப்பும் நடத்தப்பட்டது.

பட்டதாரி ஆசிரியர் நியமனங்களில் தமிழக அரசு கடைபிடித்து வந்த வெயிட்டேஜ் முறையால், பல ஆசிரியர்கள் TET தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்தும், பணிக்கும் செல்லமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதனால் பாதிக்கப்பட்ட 462 பேர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அங்கு அவர்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கவில்லை. பின்பு தமிழக அரசே 2018ஆம் ஆண்டு அந்த வெயிட்டேஜ் முறையை ரத்து செய்தது. ஆனால் அதற்குபதிலாக மீண்டும் ஒரு நியமனத் தேர்வு என்ற போட்டித் தேர்வை எழுதி வெற்றிபெற வேண்டும் என்று அறிவித்தது.

அதேசமயம், தமிழக அரசு ஆசிரியர் பணிக்கு வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 40 எனவும், பிற பிரிவினருக்கு 45 வயது எனவும் ஒரு அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது. எனவே வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்டு பணி வாய்ப்பை இழந்தோருக்கு மீண்டும் பணி வழங்குமாறு அந்த கோரிக்கையில் குறிப்பிட்டிருந்தனர். மனுவை வாங்கிய முதல்வர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துச் சென்றார்.