தங்களின் 75 சதவிகித ஊழியர்களை 2025 ஆம் ஆண்டு வரை வீட்டிலிருந்தே வேலையைச் செய்ய வைக்க முடியும் என்று டிசிஎஸ் நிறுவனம் நம்புவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
கி.மு. என்றும் கி.பி என்று முன்பு காலத்தை முன்பு காலத்தைப் பிரித்தார்கள் வரலாற்று ஆசிரியர்கள். ஆனால், இனிமே கொரோனாவிற்குப் பின் கொரோனாவிற்கு முன் எனக் காலத்தைப் பிரிக்க வேண்டியது வருமோ என அச்சம் நிலவி வருகிறது. அந்தளவுக்கு உலகத்தை ஒட்டு மொத்தமாகப் புரட்டிப் போட்டுள்ளது இந்தக் கொள்ளை நோய்.
பொருளாதார வீழ்ச்சி, பெட்ரோல் விற்பனை சரிவு, வணிக நிறுவனங்கள் அனைத்தும் மூடல், மக்களின் நடமாட்டத்திற்குத் தடை, போக்குவரத்துகள் அனைத்தும் நிறுத்தம் என உலகம் இதுவரைக் கண்டிராத ஒரு அமைதியான போர்ச் சூழல் உலகத்தைச் சூழ்ந்துள்ளது.
எனவே பல பெரிய பெரிய நிறுவனங்கள் ஆட்டம் காண ஆரம்பித்துள்ளன. புதியதாக ஊழியர்களுக்கு இந்நிறுவனங்கள் ‘வொர்க் ஃபிரம் ஹோம்’ என்ற திட்டத்தைத் தந்துள்ளன.
முதலில் கொரோனா ஊரடங்கு முடிந்தவுடன் நிலைமை சீராகி, பலரும் வழக்கம் போல் வேலைக்குச் சென்றுவிடலாம் என நினைத்துக் கொண்டிருக்கையில் டாடா கன்சல்டன்சி சர்வீஸ் நிறுவனம் ஒரு புதிய முடிவை எடுத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. இனிவரும் சில காலத்திற்கு இந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் 100 சதவீத தொழிலாளர்களில் 25 சதவிகித தொழிலாளர்கள் அலுவலகத்திற்கு வந்து பணிபுரிய வேண்டிய அவசியம் இருக்காது என டிசிஎஸ் முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. இதற்கு விரிவான அர்த்தம் என்னவென்றால் டிசிஎஸ்-இன் 75 சதவிகித தொழிலாளர்கள் 2025 வரை வீட்டிலிருந்தே வேலை செய்தால் போதும் என இந்நிர்வாகம் நம்புவதாகத் தெரிகிறது. இது குறித்த செய்தியை ‘தி நியூஸ் மினிட்’ தளம் வெளியிட்டுள்ளது.
டி.சி.எஸ் தலைமை இயக்க அதிகாரி (சி.ஓ.ஓ) என்.ஜி.சுப்பிரமணியம் இந்தத் திட்டத்திற்கு ‘25/25மாடல்’ எனப் பெயரிட்டுள்ளார். மேலும் 25% க்கும் அதிகமான ஊழியர்கள் தங்களின் முழுமையானப் பங்களிப்பை வழங்க வேண்டிய தேவை இருக்காது என்று இவர் கூறியுள்ளார். ஊரடங்கு அனுபவத்திற்குப் பின் “ஊழியர்கள் 25% நேரத்தை எங்கள் அலுவலகங்களில் செலவிட்டால் போதுமானது என்று நான் நினைக்கிறேன். ஊரடங்கு காலத்தில் டி.சி.எஸ் தனது 90% பணியாளர்களை வீட்டிலிருந்து வேலை வாங்க முடிந்துள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். டி.சி.எஸ் நிறுவனம் உலகளவில் 4.48 லட்சம் ஊழியர்களைக் கொண்டுள்ளது. அவர்களில் 3.55 லட்சம் பேர் இந்தியாவில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.